இந்திய விமானப்படை தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர் சொல்வதென்ன? - BBC EXCLUSIVE
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்களை குறிவைத்து இந்திய விமான படை தாக்கியதாக இந்தியா கூறுகிறது. இந்நிலையில் தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர்கள் சம்பவங்களை விவரிக்கின்றனர்.
ஜப்பா பகுதியைச் சேர்ந்த விவசாயி முகமது ஆதில் சொல்வதென்ன?
''அதிகாலை 3 மணியளவில், நாங்கள் ஒரு பயங்கரமான சத்தத்தை கேட்டோம். பூமி அதிர்வதுபோல இருந்தது. அதன்பிறகு எங்களால் தூங்கமுடியவில்லை.அடுத்த 5-10 நிமிடங்களில், அது ஒரு வெடிச்சத்தம் என்று தெரியவந்தது. என் உறவினர் அங்கு வசிக்கிறார். அந்த இடத்தின் பெயர் கங்கட். என் உறவினரின் வீடு சேதமடைந்தது; ஒருவருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. என உறவினர்கள், அங்கு விமானங்கள் பறக்கும் சத்தம் கேட்டதாகவும், அதன்பிறகு வெடி வெடித்ததாகவும் கூறுகின்றனர்."என்று ஜப்பா பகுதியை சேர்ந்த விவசாயி பிபிசியின் எம்.ஏ.ஜேரலிடம் தெரிவித்தார்.
"அதன்பிறகு, சில பாகிஸ்தானியர்கள் வந்தார்கள். காலை விடிந்ததும், நான் அங்கு சென்றேன், மிகவும் ஆழமான பள்ளத்தை பார்த்தேன். 4-5 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது'' என்றும் தெரிவித்தார் ஆதில்

மற்றொரு நபர் வாஜித் ஷா, ''டமால், என வெடிக்கும் சத்தம் கேட்டது. துப்பாக்கியால் சுடுவது போல சத்தம் கேட்டது. எனக்கு இந்த சத்தம் மூன்று முறை கேட்டது. அதன்பிறகு அமைதியாகிவிட்டது'' என்கிறார்.
இந்நிலையில், பாகிஸ்தானின் எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள பாலகோட் பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர் ஜுபைர் கானை பிபிசி உருது தொடர்பு கொண்டு பேசியபோது, "பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட மன்ஷெரா மாவட்டத்தை சேர்ந்த மக்கள், இன்று அதிகாலை சுமார் மூன்று முதல் நான்கு மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட வெடிச்சத்தங்களை கேட்டதாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த தாக்குதல் குறைந்தது நான்கு மணிநேரம் மன்ஷெரா மற்றும் அபோதாபாத்துக்கு அருகிலுள்ள பாலகோட்டில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன" என்று அவர் கூறியுள்ளார்.
தாக்குதல் நடந்ததாக கூறப்படும் ஜப்பா, கார்ஹி ஹபிபுல்லா பகுதிகளை சேர்ந்த மக்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது அங்கு ஏற்கனவே இருந்த பாதுகாப்பு படைகளால் தாங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக பாலகோட் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
_____Reference | Copyrights_____
Copyrights of this Post (Article & Image) belong to : https://www.bbc.com
Link to Original Post : https://www.bbc.com/tamil/global-47369138
Post a Comment