பண மோசடி குற்றச்சாட்டு: மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி யாமின் கைது
பண மோசடி குற்றச்சாட்டில் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமின் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலைதீவு ஜனாதிபதி பதவிக்கு அண்மையில் நடைபெற்ற மறுதேர்தலில் யாமீன் தோல்வியடைந்தார். அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முகமது சோலி வெற்றி பெற்று, ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். இந்தத் தேர்தலுக்கு முன்னதாக 15 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமான வழிகளில் பெற்றதாக யாமீன் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு, மாலியில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது யாமீன் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், யாமீனை கைது செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, யாமீன் கைது செய்யப்பட்டு, துனிதூவில் உள்ள சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாமீனுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும், மோசடி செய்த பணத்தை விட 3 மடங்கு அபராத தொகையும் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மாலைதீவில் உள்ள யாமீனின் வங்கி கணக்குகளையும் சொத்துக்களையும் நீதிமன்றம் முடக்கி வைத்துள்ளது.
மாலைதீவு ஜனாதிபதியாக கடந்த 2013ஆம் ஆண்டில் யாமீன் பதவியேற்றார். அப்போது அவர், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் பலரை மாலைதீவில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேற வழிவகுத்தார்.
_____Reference | Copyrights_____
Copyrights of this Post (Article & Image) belong to : http://www.thinakaran.lk/
Link to Original Post
Post a Comment