Header Ads

Ads Bar

கொடுங்கையூர் குப்பைமேடு: 35 ஆண்டுகளாக மாறாத வளர்ச்சியின் துயரம் சொல்லும் கதை #Groundreport

கொடுங்கையூர் குப்பைமேடு: 269 ஏக்கர், 2800 டன் - மலைக்க வைக்கும் கதைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
(மக்களவைத் தேர்தல் 2019ஐ முன்னிட்டு பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணுப்ரியா வடசென்னையின் பிரச்சனைகள், தேவைகள் குறித்து கள ஆய்வு செய்துள்ளார். அது மூன்று பகுதிகளாக வர உள்ளது அதன் முதல் பகுதி இது.)
நாங்கள் பல தேர்தல்களை கடந்து வந்துவிட்டோம். ஆனால் இந்த துயரத்தை மட்டும் கடக்க முடியவில்லை என்கிறார்கள் கொடுங்கையூர் பகுதி மக்கள்.
அவர்கள் துயரமென குறிப்பிடுவது கொடுங்கையூர் குப்பை மேட்டைதான். வட சென்னை குறித்து ஒரு சித்தரத்தை அசைப்போட்டால், அதன் இணைப்பாக கொடுங்கையூர் குப்பை மேடும் நம் நினைவுக்கு வரும்.

வளர்ச்சியின் துயரம்

நெருக்கமான குடியிருப்புகள், புழுதி பறக்கும் வீதிகள் அதற்கு மிக அருகில் நாள் ஒன்றுக்கு சுமார் 3000 டன்னுக்கும் அதிகமான குப்பைகளை தாங்கும் குப்பை மேடு.
இதனை வளர்ச்சியின் துயரமென வர்ணிக்கிறார்கள் செயற்பாட்டாளர்கள். திடக்கழிவு மேலாண்மையில் நாம் எவ்வளவு மோசமாக தோல்வி உற்று இருக்கிறோம் என்பதற்கான சாட்சி கொடுங்கையூர் குப்பை மேடு என்கிறார்கள் அவர்கள்.
சுமார் 269 ஏக்கர் பரப்பளவில் உள்ள கொடுங்கையூர் குப்பை மேட்டில் நாள் ஒன்றுக்கு 2600 லிருந்து 2800 மெட்ரிக் டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன என்கிறது சென்னை மாநகராட்சி தரவுகள்.
இந்த குப்பை மேடு சுமார் 35 வருடங்களுக்கும் மேல் இயங்கிவருகிறது. இந்த பகுதியின் மக்களும் பல தேர்தல்களை சந்தித்துவிட்டனர். ஆனால் அனைத்து கட்சிகளும் தேர்தலின்போது குப்பைமேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
கொங்கையூர்
"எங்கெங்கோ உள்ள குப்பைகளையும் இங்கேதான் கொட்டுகிறார்கள். வீட்டிற்கு விருந்தாளிகள் எல்லாம் வந்தால் கூட உட்கார்ந்து சாப்பிடக் கூட முடியாது. அப்படி ஒரு துர்நாற்றம் வீசும். வீட்டைச் சுற்றி எப்போதும் கொசுக்கள் மொய்த்து கொண்டே இருக்கும்" என்கிறார் எஸ்தர்.
கொடுங்கையூர் குப்பைமேடு: எப்போது தீரும் முப்பது ஆண்டு துயரம்?
கொடுங்கையூர் குப்பை மேடு பகுதிக்கு ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவிலேயே ஹவுசிங் போடு ஒன்று உள்ளது அதில் சுமார் 288 குடும்பங்கள் வசிக்கின்றன. அதற்கு சற்று தள்ளி பார்த்தால் சிமெண்ட் ஓடுகளால் ஆன வீடுகளும், பாதி கட்டி முடிக்கப்படாத வீடுகளும் கொண்ட நெருக்கமான குடியிருப்புகளை நாம் காணமுடியும்.
கொடுங்கையூர்
இந்த நெருக்கமான குடியிருப்பு ஒன்றில் வாழ்ந்து வருகிறார் எஸ்தர். நீங்கள் எத்தனை உயரமாக இருந்தாலும் குனிந்தே செல்ல வேண்டும் என்பது போலான வாசல்படி, பெயருக்கு ஒரு சமையலறை அதற்கு அடுத்து சென்றால் ஒரு சின்ன அறை. அங்கு இருக்கும் பொருட்களை கழித்து பார்த்தால் நான்கு பேர் நிற்கக் கூட அந்த அறை போதுமானதாக இருக்காது இதுதான் எஸ்தரின் வீடு.
ஏறக்குறைய அங்கே சுற்றியுள்ள அத்தனை வீடுகளும் இந்த அளவில்தான் காணப்படுகிறது.

’நோய்களோடுதான் வாழ்க்கை’

"தேர்தல் சமயங்களில் பலர் இங்கு வருவதுண்டு. எந்த கட்சியாக இருந்தாலும் சரி இந்த குப்பைமேட்டுக்கு தீர்வு கொண்டுவருவதாக சொல்வார்கள். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு யாரும் இதற்கான தீர்வு குறித்து பேசுவதே கிடையாது" என்கிறார் எஸ்தர்.
சென்னையில் நாம் உருவாக்கும் குப்பைகள் அனைத்தும் போய் சேருகின்ற இடம் இரண்டு. ஒன்று கொடுங்கையூர் மற்றொன்று பெருங்குடி குப்பை மேடு.
குப்பைத் தொட்டி
காசநோய், மலேரியா, டெங்கு காய்ச்சல், போன்ற அனைத்தும் இந்த பகுதியில் மிக சாதரணமாக வரக்கூடிய நோய்கள் என்கிறார் குப்பை மேட்டிற்கு எதிரில் இருக்கும் ஹவுசிங் போர்ட் குடியிருப்பில் 25 வருடங்களுக்கும் மேலாக வசிக்கும் கெளரி.
இந்த பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் உழைக்கும் வர்க்கத்தினர். அவர் தாங்கள் சம்பாதிக்கும் பணம் பெரும்பாலும் தங்களுக்கான உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெறுவதற்கே போதுமானதாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
"மழை வந்தால் இங்கு தண்ணீர் பெரும் அளவில் தேங்கி விடுகிறது. அதைபற்றி பல சமயங்களில் புகார் கொடுத்தாலும் ஒரு வாரம் கழித்தே நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறார் கெளரி.
இந்த குப்பைகள் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்களுக்கு பெரும் துயரமாக இருந்து வரும் நிலையில், இந்த குப்பையை நம்பியும் இங்கு பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
கொடுங்கையூர்
"காலை எட்டு மணிக்கு இங்கு வரும்; இருட்டும் வரை இங்குள்ள குப்பைகளில் இருக்கும் பிளாஸ்டிக் கேன், கண்ணாடி பாட்டில்கள், இரும்பு, அலுமனியம் ஆகியவற்றை எடுப்போம்" என்கிறார் தனது பத்து வயதிலிருந்து இந்த பணியில் ஈடுபட்டு வரும் கவிதா.
இந்த குப்பைகளை பொறுக்கி நாள் ஒன்றுக்கு 200-300 வரை சம்பாதிப்பதாகவும், அதுதான் தன் குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருப்பதாகவும் கூறுகிறார் அவர்.
இந்த குப்பை மேடு சுற்றியுள்ள மக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள், குப்பைகளை எரிப்பதனால் ஏற்படும் காற்று மாசு இதனோடு சேர்ந்து அந்த பகுதியின் நிலத்தடி நீரின் தன்மையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்கின்றனர் சூழலியளாளர்கள்.
மருத்துவக் கழிவுகளும் கொட்டப்படுகிறதா?
இங்கே வீட்டுக் கழிவுகள் தவிர மருத்துவக் கழிவுகள் மற்றும் பிற அபாயகரமான கழிவுகளும் வருவதுண்டு என்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன்.
Nityanand நித்தியானந்த்படத்தின் காப்புரிமைFACEBOOK
"வீட்டுக் கழிவுகள் என்றாலும்கூட நாம் அதை சாதரணமாக நினைத்துவிட முடியாது. மக்கக்கூடிய குப்பைகளிலிருந்து வெளி வரக்கூடிய அமிலத்தன்மை போன்ற திரவம், சுற்றியிருக்கும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களில் உள்ள விஷங்களை உறிஞ்சி எடுத்து நிலத்தடி நீருக்கு கொண்டு செல்கிறது. எனவே அந்த பகுதியில் உள்ள மண்ணும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது." என்கிறார் அவர்.
இந்த நீரை சுற்றுப்புற பகுதி மக்கள் பயன்படுத்தும்போது அவர்களுக்கு தோல் தொடர்பான வியாதிகள் உட்பட பல வியாதிகள் வருவதாக மேலும் தெரிவிக்கிறார் நித்தியானந்த்.
கொடுங்கையூர்
ஆனால், "கொடுங்கையூர் குப்பை மேட்டை பொருத்தமட்டில் வீட்டுக் கழிவுகளே வருகின்றன. மருத்துவ கழிவுகள் ஏதும் வருவதில்லை" என சென்னை மாநகராட்சியின் கட்டடங்கள் மற்றும் திடக்கழிவுத் துறையின் கண்காணிப்பு பொறியாளர் ஜி.வீரப்பன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இந்த குப்பைமேடு தற்போதுள்ள இடம் ஒரு சதுப்பு நிலம் எனவே அங்கு குப்பைகளை கொட்டுவது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய கேடு என்றும் தெரிவிக்கின்றனர் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்.
"ஒரு காலத்தில் சென்னை மாநகராட்சி குப்பைகளை கொட்ட தொடங்கியபோது அங்கு வீடுகள் இல்லை ஏதும் இல்லை ஆனால் காலப்போக்கில் அது குடியிருப்பு பகுதியாக மாறிவிட்டது". என்கிறார் வீரப்பன்
திடக்கழிவு மேலாண்மை விதிகள்படி குப்பைகளை பிரித்து எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவை தேர்தலுக்கு பிறகு செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கான அனைத்துவித நடவடிக்கையும் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


_____Reference | Copyrights_____

Copyrights of this Post (Article & Image) belong to : https://www.bbc.com

Link to Original Post : https://www.bbc.com/tamil/india-47731533

No comments

Powered by Blogger.