Header Ads

Ads Bar

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: "தாக்குதல் குறித்து முன்னரே மின்னஞ்சல் வந்தது" - பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்

படத்தின் காப்புரிமைMARK TANTRUMImage captionஜெசிந்தா ஆர்டர்ன்

நியூசிலாந்தில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இருவேறு மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதல்களில் தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தலா ஒருவர் உள்பட ஐந்து இந்தியர்கள் பலியாகியுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக, கொலைக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 28 வயதாகும் பிரெண்டன் டாரண்ட் எனும் நபர் தனியாக திட்டம் தீட்டியதாக நியூசிலாந்து காவல்துறையினர் நம்புகின்றனர்.

மேலும் அவருடன் கைதான மூவருக்கும் இந்தத் தாக்குதலில் தொடர்பில்லை எனத் தோன்றுவதாக கிரைஸ்ட்சர்ச் நகர காவல் ஆணையர் மைக் புஷ் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமைREUTERSImage captionநீதிமன்றத்தில் பிரெண்டன் டாரண்ட்

தம்மை வெள்ளை இனவாதியாகக் கூறிக்கொள்ளும் அந்த நபர், தாக்குதல் சம்பவத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்தார்.

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் துப்பாக்கித்தாரி நடத்திய தாக்குதலில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. அதில் இந்தியாவின் ஹைதராபாத் நகரத்தை சேர்ந்த 31 வயதான ஃபராஜ் ஆஷன் என்பவரும், குஜராத்தின் பாருஷ் நகரத்தை பூர்வீகமாக கொண்ட முசா வாலி சுலேமான் பட்டேல் ஆகிய இருவர் உள்பட மொத்தம் ஐந்து பேர் அடக்கம் என்பது தெரியவந்துள்ளது.

புகைப்பட காப்புரிமை @IndiainNZ@INDIAINNZ

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நியூசிலாந்திலுள்ள இந்திய தூதரகம், "கிரைஸ்ட்சர்ச் நகரத்தில் நடந்த தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களை குடும்பத்தினர் தெரிந்துக்கொள்வதற்காக சிறப்பு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்வுநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன? - விளக்குகிறார் நியூசிலாந்து வாழ் தமிழர்

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிரைஸ்ட்சர்ச் நகரத்தில் செய்தியாளர்களை சந்தித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், "கிரைஸ்ட்சர்ச்சின் இருவேறு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், அந்த தாக்குதலை தொடுப்பதற்கு சுமார் ஒன்பது நிமிடங்கள் முன்னதாக அதுகுறித்த அறிக்கை ஒன்றை, எனக்கு உள்பட 30 பேருக்கு மின்னஞ்சல் செய்தார்" என்று கூறினார்.

இருப்பினும், அந்த மின்னஞ்சலில், தாக்குதல் நடத்தப்படுவதற்காக குறிப்பிட்ட காரணமோ அல்லது நிகழ்விட தகவலோ குறிப்பிடப்படவில்லை என்றும், அந்த மின்னஞ்சல் தனக்கு கிடைக்கப்பெற்ற இரண்டே நிமிடங்களில் அதுகுறித்து பாதுகாப்பு படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

"இதை ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்றுதான் கூற முடியும். நீங்கள் அனைவரும் அந்த தாக்குதல் காணொளியை பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். தீவிரவாத எண்ணம் கொண்டவர்களுக்கு நியூசிலாந்தில் இந்த உலகத்திலும் இடமில்லை," என நியூசிலாந்து பிரதமர் கூறியுள்ளார்.

Image captionஇறந்த ஃபராஜ் ஆஷன் (இடது), மற்றும் காயமடைந்த ஜகாங்ஹீர் (வலது)

"ஆஷனுக்கு நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அவருக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாத கைக்குழந்தையும் உள்ளனர். அவர் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக அல்-நூர் மசூதிக்கு சென்றுள்ளார். இந்த நிகழ்வு குறித்து தெரியவந்ததும் அவரின் மொபைலுக்கு அழைத்தேன். ஆனால் எந்த பதிலும் இல்லை. இதைக்கேட்டு எனது மனைவி படுத்த படுக்கையாகிவிட்டார். பிறகு எனது மகனுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால் உயிரிழந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது" என்று ஃபராஜின் தந்தை பிபிசி தெலுகு சேவையின் சங்கீதம் பிரபாகரிடம் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த மற்றொரு இந்தியர் இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

"இந்த தாக்குதலில் படுகாயமடைந்த எனது சகோதரரான முசா வாலி சுலேமான் பட்டேல், மருத்துமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால் உயிரிழந்துவிட்டார்" என்று அவரது சகோதரரான ஹஜி அலி பட்டேல் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் பாருஷ் நகரத்தை சேர்ந்த முசா, இந்த தாக்குதலுக்கு சற்று முன்னதாக தான் தனது மனைவியுடன் மசூதிக்கு செல்லவுள்ளதாக அலைபேசியில் தெரிவித்தாக ஹஜி கூறுகிறார்.

_____Reference | Copyrights_____

Copyrights of this Post (Article & Image) belong to : https://www.bbc.com

Link to Original Post : https://www.bbc.com/tamil/global-47600762

No comments

Powered by Blogger.