சம்பூர் அனல்மின்னுற்பத்தி நிலையத்தினால் சூழல் மாசடைவு ஏற்படும் எனக்கூறி அது மூடப்பட்டது. அத்திட்டம் செயற்படுத்தப்பட்டிருப்பின் தற்போதைய மின்நெருக்கடியை ஈடு செய்திருக்க முடியுமென வியத்மக அமைப்பு  தெரிவித்துள்ளது.
நிலக்கரி பயன்படுத்தப்படுவதால் சூழல் மாசடைவு ஏற்படும் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். எந்தவொரு உற்பத்தியிலும் அதற்கான பக்கவிளைவு நிச்சயம் இருக்கும். எனினும் அவற்றை முகாமை செய்வதற்கு முறையான திட்டமிடலுடன் கூடிய தலைமைத்துவம் அவசியமாகும் என்று வியத்மக அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் அமுலில் உள்ள மின்வெட்டால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் வியத்மக அமைப்பினால் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த வியத்மக அமைப்பைச் சேர்ந்த கிரிஷாந்த விசென்டிகே இவ்வாறு கருத்து வெளியிட்டார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் நிலவும் மின்சாரக் கேள்வியைப் பூர்த்தி செய்யக்கூடியவாறு மின்னுற்பத்தி இடம்பெறாமையின் காரணமாக தொடர்ச்சியாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் உற்பத்தி மற்றும் கைத்தொழில் துறைகள் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக சிறிய, நடுத்தரளவு வணிகங்கள் தமது உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
மேலும் மின்வெட்டின் காரணமாக ஏற்றுமதி வர்த்தகமும் பாதிப்படைந்துள்ளது. பெரியளவு வணிகங்களே ஏற்றுமதியில் ஈடுபடுகின்ற போதிலும், ஏற்றுமதிக்கான உற்பத்தியின் ஆரம்பகட்டம் சிறிய மற்றும் நடுத்தரளவு வணிகங்களிலேயே தங்கியிருக்கின்றன. 5 வருடங்களுக்கு முன்பு வரை 98 – 100 சதவீதம் வரையில் மின்னுற்பத்தியை மேற்கொண்ட எமது நாடு தற்போது இத்தகைய மின்நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளது. இவற்றுக்கு அரசாங்கத்தின் முறையான திட்டமிடலின்மையே காரணமாக அமைந்துள்ளது.
அத்தோடு சம்பூர் அனல்மின்னுற்பத்தி நிலையத்தினால் சூழல் மாசடைவு ஏற்படும் எனக்கூறி அது மூடப்பட்டது. 
அத்திட்டம் செயற்படுத்தப்பட்டிருப்பின் தற்போதைய மின்நெருக்கடியை ஈடு செய்திருக்க முடியும். 
நிலக்கரி பயன்படுத்தப்படுவதால் சூழல் மாசடைவு ஏற்படும் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். எந்தவொரு உற்பத்தியிலும் அதற்கான பக்கவிளைவு நிச்சயம் இருக்கும்.
 எனினும் அவற்றை முகாமை செய்வதற்கு முறையான திட்டமிடலுடன் கூடிய தலைமைத்துவம் அவசியமாகும். எனவே இவ்விடயம் குறித்து நாட்டுமக்கள் விழிப்படைய வேண்டும் என்றார்.