45 செ.மீ ஆழத்தில் 1.4 கிலோ தங்கத்தை தோண்டி எடுத்த அதிர்ஷ்டகாரர்

ஆஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியிலுள்ள தங்க வயல் பகுதியில், சாதாரண உலோகம் கண்டுபிடிக்கும் கருவியை கொண்டு 1.4 கிலோ தங்கத்தை ஒருவர் தோண்டி எடுத்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தோண்டி எடுக்கப்பட்டுள்ள அந்த தங்க கட்டியின் புகைப்படத்தை உள்ளூரிலுள்ள கடை ஒன்று இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. அந்த தங்க கட்டியின் சந்தை மதிப்பு சுமார் 48 லட்சம் ரூபாய் என்று தெரிகிறது.
அந்த தங்க கட்டியை கண்டுபிடித்தவர் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அவர் தங்கத்தை தேடுவதை பொழுதுக்போக்காக கொண்டவர் என்று அதன் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றியுள்ள கடையின் உரிமையாளர் மாட் குக் பிபிசியிடம் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று பல்வேறு சம்பவங்கள் நடந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் கிடைக்கப்பெறும் நான்கில் மூன்று மடங்கு தங்கம் கல்கூர்லி எனும் இந்த பகுதியை சுற்றி எடுக்கப்படுகிறது.
- மோதி அரசால் 200 டன் தங்கம் வெளிநாடுகளுக்கு ரகசியமாக அனுப்பப்பட்டதா?
- தங்கம் உருவானது எப்படி? நியூட்ரான் நட்சத்திர மோதலில் வெளியான ரகசியம்
தங்கத்தை தேடுபவர்களுக்கு தேவைப்படும் உபகரணங்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வரும் குக், சம்பந்தப்பட்ட நபர் புதருக்கு அடியில் சுமார் 45 செமீ ஆழத்தில் இந்த தங்க கட்டியை கண்டறிந்ததாக கூறுகிறார்.
"எனது கடைக்கு வந்த அந்த நபர், அவரது கையில் இருந்த தங்கத்தை காண்பித்ததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது" என்று குக் பிபிசியிடம் கூறினார்.

"அந்த தங்க கட்டி பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், அதன் எடை மிகவும் அதிகமாக இருந்தது."
இந்த பிராந்தியத்தில் சிறியளவிலான தங்கம் கிடைப்பது மிகவும் சாதாரணமானது என்று கூறுகிறார் ஆஸ்திரேலியாவிலுல்ள கர்டின் பல்கலைக்கழக பேராசிரியர் சாம் ஸ்பியரிங்.
"இந்த பிராந்தியத்தில் நிறைய தங்க சுரங்கங்கள் உள்ளதால், ஆர்வமுடையவர்கள் வார இறுதி நாட்களில் பொழுதுபோக்காக தங்கத்தை தேடுகின்றனர். இதையே முழுநேர பணியாக மேற்கொள்பவர்களும் இந்த பகுதியில் இருக்கின்றனர்" என்று சாம் கூறுகிறார்.
"இந்த பகுதியில் கிடைக்கும் பெரும்பாலான தங்கங்கள் அரை அவுன்ஸுக்கும் (14 கிராம்) குறைவு. ஆனால், அவை அடிக்கடி காணக் கிடைக்கின்றன."
_____Reference | Copyrights_____
Copyrights of this Post (Article & Image) belong to : https://www.bbc.com/tamil/global-48353451
Post a Comment