Header Ads

Ads Bar

மக்களவைத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தார்கள் முதல் தலைமுறை வாக்காளர்கள்?

முதல் முறை வாக்காளர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
உலகளவில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாக 2014-ஆம் ஆண்டு ஐ.நா.வின் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த பதினேழாவது மக்களவைத் தேர்தலில் 29 மாநிலங்களில் உள்ள மொத்த தொகுதிகளில் 282 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிப்பதில் முதல் முறை வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று தேர்தல் ஆணைய தரவுகளை மையமாக கொண்டு 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நடத்திய ஆய்வில் தெரியவந்ததாக அந்நாளிதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 18 மற்றும் 19 வயதுடைய முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 15 மில்லியன் என்று தேர்தல் ஆணையத்தின் தேர்தலுக்கு முந்தைய ஊடக கையேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி இந்த தேர்தலில், 1997-இல் இருந்து 2001-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்து, 2014க்கு பிறகு 18 வயதை பூர்த்தி செய்த முதன் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 8.1 கோடி என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முதல் முறை வாக்காளர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
சமூக ஊடகங்களின் தாக்கம் என்ன?
ட்விட்டர் இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் 90 சதவிகித முதன் முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தெரிய வந்தது. மேலும் இவர்களில் 80% பேர் நாட்டு நடப்பு குறித்த செய்திகளை தெரிந்துகொள்ள ட்விட்டரை பயன்படுத்துவதாகவும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்தது.
முதல் முறை வாக்காளர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இந்த தேர்தலில் இளைஞர்கள் அதிகளவில் வாக்களிக்க முன்னவருமாறு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் ஒட்டுமொத்தமாக 67.47% வாக்குகள் பதிவாகியுள்ளது. இது 2014 தேர்தலை விட 1.03% அதிகமாகும்.
இந்நிலையில், முதன் முறை வாக்காளர்களின் வாக்குகளை கவர்வதற்கு அரசியல் கட்சிகள், சமூக ஊடகங்கள் முதல் கல்லூரிகள் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் நடத்திய பிரசார உத்திகளில் எது தாக்கத்தை ஏற்படுத்தியது, அவ்வாறு வாக்களித்தவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பது போன்ற பல்வேறு விடயங்களை அறிந்துகொள்ள தமிழகத்தை சேர்ந்த முதன்முறை வாக்காளர்கள் சிலரிடம் பிபிசி தமிழ் பேசியது.
''மீம்ஸ்-ஐ மையப்படுத்தியே வாக்களித்தேன்''
சென்னையைச் சேர்ந்த உயிரியல் முதுகலை பயின்று வரும் மாணவி சுபஸ்ரீ வரதராஜன், தான் சுமார் நான்கு ஆண்டுகளாக பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருவதாகவும், அவற்றின் மூலம் அரசியல் குறித்த மீம்ஸ், செய்திகள், காணொளிகளை மையப்படுத்தியே தனது வாக்குகளை பதிவு செய்ததாகவும் கூறுகிறார்.
முதல் முறை வாக்காளர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஆனால் இதுபோன்ற மீம்ஸ்-இன் நம்பகத்தன்மையை எப்படி உறுதி செய்கிறீர்கள் என்று கேட்டபோது, ''எல்லாவற்றையும் அப்படியே நம்பிவிடமாட்டேன். எனக்கு கிடைத்த தகவல், போலிச் செய்தி போல தோன்றினால் அது குறித்து கூகுளில் தேடி பார்த்தும் நபர்களுடன் கலந்துரையாடியும் அது உண்மையா இல்லையா என்பதை அறிந்துகொள்வேன்'' என்றார்.
குறிப்பாக, சாதி, இனம் போன்றவற்றை மையப்படுத்திய செய்திகள் மக்களின் உணர்ச்சியை தூண்டிவிடுவதாகவும், தமிழனாக இருந்தால், தேசியவாதியாக இருந்தால் இதை அதிகம் பகிர வேண்டும் என்ற கட்டளைகளோடு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் சமூக ஊடகங்கள் மட்டுமின்றி வாட்சப் போன்ற செயலிகள் மூலமும் பலராலும் பகிரப்பட்டதாக கூறுகிறார்.
''வேட்பாளரின் சமூக ஊடக பக்கத்தை பின்தொடர்ந்தேன்''
''நாடாளுமன்றத்தில் நமது பிரதிநிதியாக அமரப் போகும் நபரை தேர்வு செய்ய சில மணிநேரம் ஒதுக்கினால் தவறில்லை என்று நினைத்தேன். தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் எனது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை கண்டறிந்து, அவர்களின் பேஸ்புக் பக்கங்களுக்குள் சென்று பதிவுகளை பார்த்தேன். சமூக ஊடகங்களில் ஒரு வேட்பாளர் எப்படிப்பட்ட செய்திகளை பகிர்கிறார் என்பதை வைத்து அவர் மக்களுக்காக ஏதாவது செய்யக்கூடியவரா இல்லையா என்பதை ஓரளவுக்கு கணித்துவிட முடியும்.
முதல் முறை வாக்காளர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அந்த வகையில், நான் பேஸ்புக்கில் பார்த்த ஒரு வேட்பாளர் பதிவிட்ட சில கருத்துகள் பெண்களுக்கு எதிரானதாக இருந்தது மட்டுமின்றி, ஆபாச எண்ணங்களைத் தூண்டும் வகையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். எனவே, இவருக்கு நிச்சயம் வாக்களிக்கக் கூடாது என்று அப்போதே முடிவு செய்துவிட்டேன்'' என்கிறார் 21 வயதாகும் சுபஸ்ரீ.
''இன்றைய காலத்தில் வெல்லப்போகும் சாத்தியம் கொண்ட கட்சிக்கு வாக்களிப்பதால் மட்டுமே தங்கள் வாக்குகள் வீணாக்கப்படுவதில்லை என்பது பலரது எண்ணமாக இருக்கிறது. ஆனால், புதிதாக ஒரு கட்சி போட்டியிட்டால் அதற்கு ஒரு வாய்ப்பளித்துதான் பார்ப்போமே என்று இளம் தலைமுறையினர் நினைக்கின்றனர். அதனால்தான் நகர்ப்புற பகுதிகளில் சீமானின் நாம் தமிழர் கட்சியைவிட நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாக நினைக்கிறேன்'' என்று அவர் மேலும் கூறுகிறார்.
''தொலைக்காட்சியைவிட வேகமானது சமூக ஊடகம்''
சென்னையை சேர்ந்த சுயதொழில் முனைவோரான 21 வயதாகும் ஃபயாஸ் அகமது கூகுள் தேடுதளம் மூலம் தேர்தல் சார்ந்த செய்திகளை தெரிந்துகொள்வதாக கூறுகிறார். இன்றைய இளைஞர்கள் பலரும் தங்கள் வாக்கு சரியான நபருக்கு சென்று சேர வேண்டுமென்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இதற்கு சமூக வலைத்தளம் பெரிதும் உதவுகிறது என்றும் தொலைக்காட்சியோடு ஒப்பிடுகையில் சமூக ஊடகங்கள் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற முடிகிறது என்கிறார் இவர்.
"ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை பற்றிய தகவலை அந்த பெயரில் உள்ள ஹேஷ்டேகை பயன்படுத்தி ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? அவர்களின் கொள்கைகள் என்னென்ன? அவர்களின் கட்சி மக்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளது என்பதையெல்லாம் சமூக ஊடகங்கள் மற்றும் வாட்சாப் போன்ற குறுஞ்செய்தி பகிர்வு செயலிகள் மூலம் கிடைக்கிறது''
''அனைவருக்கும் பொதுப்படையான திட்டங்கள் கொண்டுவர வேண்டும்''
''நான் வசிக்கும் சைதாப்பேட்டை தொகுதியில் நான்கு தெருக்களில் உள்ள சுமார் ஐம்பது பேர் இதற்கு முந்தைய தேர்தலில் வாக்களித்தவர்களாக இருந்தாலும் இந்த முறை வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் இல்லை என்பது என் நண்பர்கள் மூலம் தெரியவந்தது. இப்படிப்பட்ட சூழலில் எனக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்ததில் அதை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்'' என்கிறார் ஃபயாஸ்.
மத்திய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன என்று கேட்டபோது, ''மதச்சார்பற்ற இந்திய நாட்டில் எந்த திட்டம் கொண்டுவந்தாலும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் பாராமல் இயன்றவரையில் அனைவருக்கும் பொதுவானதாகவும் தார்மீக ரீதியில் யாரையும் பாதிக்காத வகையிலும் அமைக்க வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை குறைந்துகொண்டே வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பது, விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்களை கொண்டுவருவது போன்றவற்றை ஆளும் அரசிடம் இருந்து எதிர்பார்ப்பதாக இவர் கூறுகிறார்._____Reference | Copyrights_____

Copyrights of this Post (Article & Image) belong to : https://www.bbc.com/tamil/india-48421124

No comments

Powered by Blogger.