Header Ads

Ads Bar

தீர்ப்புகள் மாறுதலுக்குரியவை: ஐந்து கொலைகள், ஆறு நபர்கள் மற்றும் களவாடப்பட்ட 16 ஆண்டுகள் - துயர கதை

ஐந்து கொலைகள், ஆறு ஆண்கள் மற்றும் களவாடப்பட்ட 16 ஆண்டு கால வாழ்க்கை
கடந்த மார்ச் மாதம் இந்திய உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை மாற்றிக் கொண்டு, கொலைக் குற்றச்சாட்டில் இருந்து ஆறு பேரை விடுதலை செய்தது. அந்த நபர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு எதிராக நீதி தவறாக பயன்படுத்தப்பட்டது குறித்து பிபிசியின் செளதிக் பிஸ்வாஸ் செய்தி சேகரித்துள்ளார். இந்தியாவில் உள்ள குற்றவியல் சட்ட நடைமுறையின் நிலைமையை வெளிப்படுத்துவதாக அது உள்ளது.
கடந்த 16 ஆண்டுகளில் ஆறில் ஐந்து பேர் 13 ஆண்டுகளாக மரண தண்டனைக் கைதிகளாக சிறையில் இருந்துள்ளனர்.
குற்றம் நடந்த போது, சிறுவயது நபராக இருந்த ஆறாவது நபர், தொடக்கத்தில் பெரியவர்களுக்கான சட்ட விதிகளின்படி விசாரிக்கப்பட்டு அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் கொலைகள் நடந்தபோது அவருக்கு 17 வயதுதான் ஆகியிருந்தது என நிரூபிக்கப்பட்டதை அடுத்து 2012ல் விடுதலை செய்யப்பட்டார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள், ஜன்னல் இல்லாத, சிறிய அறையில் தனிமை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். தலைக்கு மேல் தூக்கு கயிறு தொங்கும் உணர்வுடன் அவர்கள் இருந்தனர். இரவு முழுக்க மின்விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருக்கும். சில நேரம் சக கைதிகளின் அலறல் சப்தம் கேட்கும்.
மரண தண்டனை கைதியாக இருந்த காலம் முழுக்க, ``என் நெஞ்சின் மீது நாகப் பாம்பு அமர்ந்திருந்ததைப் போலவே இருந்தது'' என்று அவர்களில் ஒருவர் தெரிவித்தார்.
``மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் ஆவி நடமாட்டம் இருப்பதைப் போல'' அச்சத்துடன் இருந்ததாக இன்னொருவர் கூறினார். பகல் பொழுதில் சில மணி நேரம் வெளியே விடுவார்கள். வலிப்பு நோய் பாதிப்புள்ளவர்களை அவர் பார்த்திருக்கிறார். ஒருவர் தற்கொலை செய்து கொண்டதையும் பார்த்திருக்கிறார். அல்சர் வலியால் அவர் துன்புற்றிருக்கிறார். போதிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை. ``மரணத்தின் தொடர்ச்சியான அச்சத்தில், மனிதர்கள் வாழ முடியாத சூழ்நிலையில் அவர் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்'' என்று அவரைப் பரிசோதித்த இரண்டு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாபு அப்பா ஷிண்டே
Image captionபாபு அப்பா ஷிண்டே
2003 ஆண்டு மகாராஷ்டிராவில் நாசிக்கில் பழத்தோட்டத்தில் கொய்யா பறிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட - அம்பாதாஸ் லட்சுமண் ஷிண்டே, பாபு அப்பா ஷிண்டே, அன்குஷ் மாருதி ஷிண்டே, ராஜ்ய அப்பா ஷிண்டே, ராஜு மிகசு ஷிண்டே, சுரேஷ் நாகு ஷிண்டே என்ற - அந்த ஆறு பேருக்கும் அப்போது 17 முதல் 30 வயது ஆகியிருந்தது. 17 வயதாகியிருந்த அன்குஷ் மாருதி ஷிண்டே தான் அவர்களில் இளையவராக இருந்தார்.

பொய் குற்றச்சாட்டு

  • ஜூன் 2006 - குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேருக்கும் மரண தண்டனை விதித்து புனே விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு
  • மார்ச் 2007 - குற்றவாளிகள் என அளித்த தீர்ப்பு செல்லும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு. ஆனால், மூன்று பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு
  • ஏப்ரல் 2009 - மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஆறு பேருக்கும் மரண தண்டனை என்று தீர்ப்பு.
  • அக்டோபர் 2018 - தனது தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றது.
  • மார்ச் 2019 - ஆறு பேரும் பொய்யாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கூறி தனது தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
ஷிண்டே சமூகத்தவர்கள் இந்தியாவின் மிகவும் ஏழ்மையானவர்கள், மலைவாழ் பழங்குடியினர். பள்ளம் தோண்டுபவர்கள், குப்பை பொறுக்குபவர்கள், கால்வாய்களை சுத்தம் செய்பவர்கள், மற்றவர்களின் பண்ணைகளில் வேலை செய்து பிழைப்பு நடத்துபவர்கள். 13 ஆண்டு காலமாக மூன்று நீதிமன்றங்களில் ஏழு நீதிபதிகள், அவர்களைக் குற்றவாளிகள் என்று கூறியுள்ளனர்.
இப்போது அவர்கள் அனைவரின் முடிவுகளுமே தவறாகிவிட்டது.
தண்டனைகளை ரத்து செய்ததன் மூலம் மைல்கல் தீர்ப்பை அளித்துள்ளது உச்சநீதிமன்றம். வரலாற்றில் முதன்முறையாக, இந்தியாவின் உச்சநீதிமன்றம், மரண தண்டனை வழங்கிய தன்னுடைய தீர்ப்பையே ரத்து செய்துள்ளது.
ஐந்து கொலைகள், ஆறு ஆண்கள் மற்றும் களவாடப்பட்ட 16 ஆண்டு கால வாழ்க்கை
அவர்கள் பொய்யாக குற்றச்சாட்டில் சேர்க்கப் பட்டுள்ளார்கள் என்றும், இதில் நீதிமன்றங்கள் மிகப் பெரிய தவறு இழைத்துவிட்டதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். ``நேர்மையான புலனாய்வோ, நேர்மையான விசாரணையோ நடைபெறவில்லை'' என்றும், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் உரிமைகள் பறிக்கப் பட்டுள்ளன என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
``காவல் துறை மற்றும் வழக்காடியவர்களின் செயல்பாடு குறித்து நாங்கள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்'' என்று அசாதாரணமான 75 பக்க தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ``உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டனர்'' என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அவர்களுடைய அப்பீல் மனுக்களை தள்ளுபடி செய்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.
வழக்கு விசாரணையில் ``முழுக்க முழுக்க அலட்சியம் அல்லது சந்தேகிக்கும் வகையிலான குறைபாடுகள்'' உள்ளன என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். தவறிழைத்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு மாத காலத்திற்குள் தலா ரூ.5 லட்சம் ($7,176; £5,696) நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தத் தொகை அவர்களுடைய ``மறுவாழ்வுக்கு'' பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். (அதாவது அவர்கள் சிறையில் இருந்த ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ.2,600)
ராஜா ஷிண்டே
Image captionராஜா ஷிண்டே
மகாராஷ்டிராவில் ஜல்னா மாவட்டத்தில் வறட்சியான போகர்தன் பகுதியில் ஆறு பேரையும் சமீபத்தில் நான் சந்தித்தபோது - அவர்களில் இருவர் சகோதரர்கள், மீதி பேர் உறவினர்கள் - மன அழுத்தம் மற்றும் பதற்றத்துடன் போராடிக் கொண்டிருந்தார்கள். நஷ்டஈட்டுப் பணம் இன்னும் கைக்குக் கிடைக்கவில்லை.
மரண தண்டனை, தங்களுடைய காலத்தை வீணடித்துவிட்டது, உணர்வுகளை மழுங்கச் செய்துவிட்டது, வேகத்தைக் குறைத்துவிட்டது, வேலைக்குத் திரும்புவதை கஷ்டமாக்கிவிட்டது என்று அவர்கள் கூறினார்கள். உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, நீரிழிவு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர், பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். மலிவான சாராயத்துடன் சில நாட்கள் கழிந்தன. சிலர் தூக்கத்துக்கும், மன அழுத்தம் குறைக்கவும் மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார்கள்.
``நான் தினமும் அரை டஜன் மாத்திரைகள் சாப்பிடுகிறேன். அப்போதும் கூட பலவீனமாகவே உணர்கிறேன். டாக்டரிடம் சென்றால், நான் நடமாடுவதற்காக குளுகோஸ் ஏற்றுகிறார்'' என்கிறார் 49 வயதான பாபு அப்பா ஷிண்டே.
``சிறைவாசம் மெல்ல மெல்லக் கொல்கிறது, தெரியாமல் கொல்கிறது. விடுதலையாகும் போது, அதுவே வலியாகிவிடுகிறது'' என்கிறார் அவர்.
ஐந்து கொலைகள், ஆறு ஆண்கள் மற்றும் களவாடப்பட்ட 16 ஆண்டு கால வாழ்க்கை
இவர்கள் சிறைக்குச் சென்றபோது, மனைவிகளும், பிள்ளைகளும் சாக்கடைகள் மற்றும் கிணறுகளை சுத்தம் செய்வது, குப்பை பொறுக்குவது போன்ற வேலைகளில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லவில்லை. பல ஆண்டுகள் வறட்சியால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியில் விவசாய வேலைகளும் அரிதாகிவிட்டது.
சிறையில் இருந்த காலத்தில் தங்களுடைய குடும்பத்தினர் பட்ட துன்பங்களை எதைக் கொண்டும் ஈடு செய்ய முடியாது என்று அவர்கள் கூறினர்.
2008 ஆம் ஆண்டில், சாக்கடைக்குப் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த பாபு அப்பாவின் 15 வயது மகன் ராஜு, மண்வெட்டி மின்சார வயரில் பட்டதில் மின்சார தாக்குதலுக்கு ஆளானார். ``குடும்பத்தில் அவன் தான் விவரம் அறிந்தவர். நான் சிறை செல்லாமல் இருந்திருந்தால், அவன் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது'' என்கிறார் பாபு அப்பா.
பாபு அப்பா, அவருடைய சகோதரர் ராஜ்ய அப்பா ஆகியோர் சிறையில் இருந்து திரும்பியதும், அவர்கள் குடியிருந்த வீடு இடிந்து குப்பை மேடாகக் கிடந்ததைப் பார்த்தனர். அவர்களுடைய குடும்பத்தினர் திறந்தவெளியில் மரத்தின் அடியிலும், கைவிடப்பட்ட ஒற்றை மாடி அரசுக் கட்டடத்திலும் தங்கியிருந்தனர். அப்பாக்களை வரவேற்க தகரக் கொட்டகை ஒன்றை பிள்ளைகள் உருவாக்கியிருந்தனர்.
``நாங்கள் இப்போது விடுதலையாகிவிட்டோம். ஆனால் வீடில்லை'' என்றார் ராஜ்ய அப்பா.
சுரேஷ் ஷிண்டே
Image captionசுரேஷ் ஷிண்டே
ராஜு ஷிண்டே கைதான போது, திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. 12 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண், இவரிடம் எந்தத் தகவலும் சொல்லாமல் வேறொருவருடன் சென்றுவிட்டார். ``வேறொருவருடன் செல்வதற்கு 12 நாட்களுக்கு முன்பு என்னைப் பார்க்க அவள் சிறைக்கு வந்திருந்தாள். என்னைவிட்டுப் போவதாக அவள் சொல்லவில்லை. அவளுடைய குடும்பத்தாரின் நெருக்கடி காரணமாக அவ்வாறு சொல்லாமல் இருந்திருக்கலாம்'' என்று ராஜு ஷிண்டே கூறினார். அவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இரு ஆண்கள் தங்களுடைய பெற்றோரை இழந்துவிட்டனர். மகன்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தகவலைக் கேட்டதும் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டனர்.
வறிய குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள், சிறைக்குச் செல்ல நாக்பூருக்கு டிக்கெட் இல்லாமல் தான் ரயிலில் பயணம் செய்திருக்கிறார்கள். ``டிக்கெட் பரிசோதகர் எங்களைப் பிடித்தால், எங்கள் கணவர்கள் சிறையில் உள்ளனர், நாங்கள் ஏழைகள், எங்களிடம் பணம் இல்லை என்று சொல்வோம். சில நேரம் அவர்கள் ரயிலை விட்டு இறக்கிவிடுவார்கள். சில நேரம் கருணையுடன் நடந்து கொள்வார்கள். ஏழையாக இருக்கும் போது கண்ணியம் கிடையாது'' என்று மனைவியரில் ஒருவரான ராணி ஷிண்டே கூறினார்.
``எங்களிடம் இருந்த எல்லாமே திருடப்பட்டுவிட்டது. எங்கள் வாழ்க்கை, வாழ்வாதாரங்கள் எல்லாமே பறிபோய்விட்டன. நாங்கள் செய்யாத தவறுக்காக எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்'' என்று கூறினார் ராஜு ஷிண்டே.
2003 ஜூன் 5 ஆம் தேதி நாசிக்கில் கொய்யா தோட்டத்தில் ஒரு குடிசையில் இருந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டார்கள். ஷிண்டே குடும்பத்தினரின் கிராமத்தில் இருந்து நாசிக் 300 கிலோ மீட்டருக்கும் (186 மைல்கள்) அதிகமான தொலைவில் உள்ளது.
குடும்பத்தில் இரண்டு உறுப்பினர்கள் - ஒரு ஆணும் அவருடைய தாயாரும் - தாக்குதலில் தப்பியுள்ளனர். கத்தி, கோடாரி, தடிகள் வைத்திருந்த ``ஏழு முதல் எட்டு பேர்'' மின்சார வசதி இல்லாத குடிசையில் நுழைந்தனர் என்று அவர்கள் காவல் துறையினரிடம் கூறியுள்ளனர். அவர்கள் இந்தியில் பேசினார்கள், மும்பையில் இருந்து வந்திருந்தனர் என்று தெரிவித்துள்ளனர். பேட்டரியில் இயங்கும் கேசட் பிளேயரில் ஓடிக் கொண்டிருந்த பாடலை நிறுத்திவிட்டு, தங்களிடம் இருந்த பணம் மற்றும் நகைகளைத் தரும்படி கேட்டிருக்கிறார்கள்.
அம்பதாஸ் லக்ஷ்மண் ஷிண்டே
Image captionஅம்பதாஸ் லக்ஷ்மண் ஷிண்டே
தங்களிடம் இருந்த பணம் மற்றும் ரூ.6,500 மதிப்புள்ள நகைகளை அவர்களிடம் கொடுத்ததாக நேரடி சாட்சிகள் கூறியுள்ளனர். வந்தவர்கள் மது குடித்துவிட்டு அவர்களைத் தாக்கியதில் இரு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்த ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். கொலையான அனைவரும் 13 முதல் 48 வரையான வயதுள்ளவர்கள்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த உடல்களை காவல் துறையினர் மறுநாள் காலை மீட்டனர். கேசட் டேப்கள், மரக்கட்டை, ஒரு கோடாரி மற்றும் 14 ஜோடி செருப்புகளை குடிசையில் இருந்து கைப்பற்றினர். ரத்தக் கறைகளையும், தடயங்களையும் அவர்கள் சேகரித்தனர்.
கொலை நடந்ததற்கு மறுநாள், தங்களிடம் இருந்த கோப்புகளில் இருந்த உள்ளூர் குற்றவாளிகளின் படங்கள் இருந்த ஆல்பத்தை, தாக்குதலில் உயிர்தப்பி முக்கிய சாட்சியாக இருந்த பெண்ணிடம் காவல் துறையினர் காட்டினார்கள். 19-35 வரை வயதுள்ள நான்கு பேரை அந்தப் பெண் அடையாளம் காட்டினார். ``அவர்கள் உள்ளூர் குற்றவாளிகள், காவல் துறையினரின் கோப்புகளில் படங்கள் இருந்தன'' என்று வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.
காவல் துறையினரும், வழக்கை நடத்தியவர்களும் ``இந்த ஆதாரத்தை மறைத்துவிட்டு'', அந்த நான்கு பேரையும் கைது செய்யத் தவறிவிட்டனர் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அதற்கு மாறாக, மூன்று வாரங்கள் கழித்து, வெகு தொலைவில் வாழ்ந்து கொண்டிருந்த ஷிண்டேக்களை காவல் துறையினர் கைது செய்தனர். ஷிண்டேக்கள் ஒருபோதும் நாசிக்கிற்கு சென்றது கூட கிடையாது என்பது பின்னர் தெரிய வந்தது. காவலில் இருந்தபோது தங்களைக் கொடுமைப்படுத்தி - `மின்சார ஷாக் கொடுத்தும் அடித்தும் துன்புறுத்தி'' - ஒப்புதல் வாக்குமூலங்களில் கையெழுத்து வாங்கியதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறைக்குச் சென்றபோது அங்குஷ் மாருதி ஷிண்டேவுக்கு 17 வயது
Image captionசிறைக்குச் சென்றபோது அங்குஷ் மாருதி ஷிண்டேவுக்கு 17 வயது
சந்தேகத்துக்குரியவர்களின் அணிவகுப்பு நடத்தியபோது, அந்தப் பெண் சாட்சியாக இருந்தவர் , ஷிண்டேக்களை ``அடையாளம்'' காட்டியதால் தான் அவர்களுடைய தலைவிதி மாறுவதற்கான முக்கிய திருப்பமாக அமைந்துவிட்டது.
2006 ஆம் ஆண்டில், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்து, ஆறு பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. நான்கு வெவ்வேறு காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அரசுத் தரப்பில் 25 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.
அடுத்த பத்தாண்டுகளுக்கும் அதிகமாக, மும்பை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் குற்றவாளிகள் என அளிக்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தன. மூன்று பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மும்பை உயர்நீதிமன்றம் குறைத்திருந்த நிலையில், அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்து அனைவருக்கும் மரண தண்டனையை உறுதி செய்தது.
கொலைகளில் ஷிண்டேக்களுக்கு தொடர்பு இல்லை என நிரூபிக்கும் பல ஆதாரங்களை நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
குடிசையிலும், வெளியிலும் சேகரிக்கப்பட்ட தடயங்கள் அவர்களுடன் ஒத்துப்போகவில்லை. சகோதரர்களிடம் இருந்து ரத்தம் மற்றும் டி.என்.ஏ. சாம்பிள்கள் எடுத்தன. ஆனால் அந்தப் பரிசோதனை முடிவுகளை அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவே இல்லை. ``குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் அவை இல்லை என்று தெரிகிறது'' என்று மார்ச் மாதம் அவர்களை விடுதலை செய்தபோது நீதிபதிகள் கூறியுள்ளனர். திருடப்பட்ட சொத்துகள் எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் இந்தியில் பேசிதாக நேரடி சாட்சிகள் கூறின. ஆனால் ஷிண்டேக்கள் மராத்தி மொழியில் பேசுகின்றனர்.
ஆதாரங்களைப் பார்த்து - அல்லது போதிய ஆதாரங்கள் இல்லாததைப் பார்த்து - மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் யுக் சவுத்ரி பத்தாண்டுகளுக்கும் மேலாக சட்டப்போராட்டம் நடத்தி ஆறு பேரையும் உயிருடன் மீட்டிருக்கிறார்.
அவர்கள் சார்பில் ஆளுநர், குடியரசுத் தலைவர், அட்வகேட் ஜெனரல் ஆகியோரிடம் அவர் கருணை மனுக்கள் சமர்ப்பித்துள்ளார். ஷிண்டேக்கள் உள்ளிட்ட 13 பேரின் மரண தண்டனைகளை ஆயுள் தண்டனைகளாகக் குறைக்க வலியுறுத்தி முன்னாள் நீதிபதிகள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதுவதற்கும் அவர் ஏற்பாடு செய்தார். ``தவறுதலாக தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் மீதான நம்பிக்கையை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்துவிடும்/'' என்று நீதிபதிகள் தங்கள் கடிதத்தில் எழுதியிருந்தனர்.
ராஜு ஷிண்டே
Image captionராஜு ஷிண்டே
16 ஆண்டுகளாகத் தீர்வுகாணப்படாத குற்ற வழக்கில், வெறுப்பை உருவாக்கும் வகையில், பதில் கிடைக்காத பல கேள்விகள் புதைந்து கிடக்கின்றன.
தெளிவில்லாத நேரடி சாட்சி அடையாளம் காட்டிய அடிப்படையில் மட்டும், வேறெந்த அடிப்படையும் இல்லாமல், நீதிமன்றங்கள் எப்படி ஷிண்டேக்களை குற்றவாளிகள் என முடிவு செய்து, மரண தண்டனை விதித்தன? இது `கொடூரமான கொலையாக' இருந்த காரணத்தால், விரைவில் விசாரணை முடிய வேண்டும் என்று மக்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் எழுந்த அழுத்தம் காரணமாக இப்படி நடந்திருக்கலாம் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
நேரடி சாட்சிகள் என் மாறிப் போய், தவறானவர்களை அடையாளம் காட்டுகிறார்கள்? நினைவில் கோளாறா அல்லது தவறுதலாக அடையாளம் காட்டுகிறார்களா? அல்லது காவல் துறையினரால் நெருக்குதல் தரப்படுகிறதா? யாருக்கும் தெரியவில்லை.
மிகவும் முக்கியமாக, 300 கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ள பகுதியில் வாழும், ஆறு அப்பாவிகளை பிடித்து எதற்காக கொலை வழக்கில் காவல் துறையினர் தொடர்புபடுத்தினார்கள்?

`சிறப்பு கண்காணிப்பு'

ராணி ஷிண்டேவின் மகள்கள்
Image captionராணி ஷிண்டேவின் மகள்கள்
அவர்கள் ஏழைகள் என்பதாலும், ஒரு காலத்தில் பரம்பரை பரம்பரையாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த சமூகத்தினர் என்று சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ் சட்டத்தால் ``குற்றப் பரம்பரையினர்'' என்று கருதப்படும் மலைவாழ் இனத்தவர்கள் என்பதாலும் ஷிண்டேக்களை காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற சமூகத்தினரை ``சிறப்புக் கண்காணிப்பில்'' வைத்திருக்க வேண்டும் என்று இந்திய காவல் துறை நடத்தைக் கையேடுகள் தெரிவிக்கின்றன. அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை, ``சந்தேகத்துக்கு உரியவர்களாக'' நடத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
நாசிக் கொலைகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற மற்றொரு கொலையில், இதில் உள்ளவர்களில் மூன்று பேர் மீது ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டது - அந்த வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று 2014ல் நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது.
அவர்களை விடுதலை செய்த மூன்று நீதிபதிகள் ஒப்புக்கொண்டதைப் போல தெரிகிறது.
``குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சமூகத்தின் அடித்தட்டு நிலையில் இருந்து வந்த மலைவாழ் இன மக்களாக இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் ஏழ்மையில் உள்ள தொழிலாளிகள். எனவே, தீவிர குற்றச் செயல்களில் அப்பாவிகள் கைது செய்யப்படுவது சாதாரணமாக நடக்கும் செயலாகிவிட்டது என்பதால், பொய்யான, புனையப்பட்ட நிகழ்வுகள் நடந்திருக்காது என்பதை மறுப்பதற்கில்லை'' என்று தீர்ப்பில் அவர்கள் கூறியுள்ளனர்.
இறுதியில், ஷிண்டேக்கள் தலைவிதியை மாறிவிட்ட நிலையில், இந்தியாவின் குற்றவியல் நீதி நிர்வாகத்தில் உள்ள பலவீனங்கள் குறித்தும், ஏழைகளுக்கு எதிராக அது எப்படி செயல்படுகிறது என்பது குறித்தும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
``தவறான குற்றவியல் நீதி நடைமுறைகளால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்களின் துன்பங்களை வெளிப்படுத்தும் வகையில் இது இருக்கிறது'' என்று டெல்லியில் உள்ள தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் சட்டம் கற்பிக்கும் அனுப் சுரேந்திரநாத் கூறுகிறார்.
``உச்சநீதிமன்றம் உள்பட, மூன்று நீதிமன்றங்கள், ஆறு அப்பாவிகள் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்த விசாரணை அதிகாரிகளின் சட்டத்திற்கு விரோதமான செயல்பாடுகளைக் கண்டறிய முடியாமல் போய்விட்டது என்றால், மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் நடைமுறைகளை நாம் பின்பற்றுவதை நியாயப்படுத்த முடியாது '' என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்தியாவில் இப்போது சுமார் 400 பேர் மரண தண்டனைக் கைதிகளாக இருக்கிறார்கள்._____Reference | Copyrights_____

Copyrights of this Post (Article & Image) belong to : https://www.bbc.com/tamil/india-48749283

No comments

Powered by Blogger.