உலகின் வேகமாக வளரும் நாடு என்ற பெயரை இழந்தது இந்தியா

கிட்டதட்ட கடந்த ஐந்தாண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மெதுவாக வளர்ந்து வருவது சமீபத்தில் இந்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை இந்தியாவின் பிரதமாக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோதி தலைமையிலான அரசாங்கத்திற்கு இது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2018 ஏப்ரல் முதல் இந்தாண்டு மார்ச் வரையிலான கடந்த நிதியாண்டில், இந்திய பொருளாதாரம் 6.8 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. அதே வேளையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில் வெறும் 5.8 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்த இந்தியாவை சீனா முந்தியது. இதன் மூலம் கடந்த இரண்டாண்டுகளில் முதல் முறையாக, இந்தியாவை முந்திய சீனா, உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட நாடு என்ற பெயரை பெற்றது.
உலக அரங்கில் எதிரொலிக்க தொடங்கியுள்ள இந்த மாற்றம், சுதந்திர இந்தியாவில் இந்திரா காந்திக்கு பிறகு, இரண்டாவது பெண் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு கடும் சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
நரேந்திர மோதியின் முதலாவது அரசின் அமைச்சரவையில் வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு இவர் அமைச்சராக செயல்பட்டுள்ளார்.
வேலைவாய்ப்புகள் எங்கே போயின?

உடனடி கவலை இந்திய பொருளாதாரம் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும்.
"குறுகிய காலம் மற்றும் நீண்டகாலம் அடிப்படையில் முன்னுரிமை அளித்து சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று கூறுகிறார் பொருளாதார வல்லுநர் தர்மகீர்த்தி ஜோஷி.
வேலைவாய்ப்புகளை உண்டாக்குவதே இந்தியாவின் முன்னுள்ள மிகப் பெரிய சவால்.
மோதியின் முந்தைய அரசு, சரிவர வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்துவிட்டதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டியிருந்தனர். ஏனெனில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2017 முதல் 2018 வரையிலான நிதியாண்டில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்தது.
அதிகளவிலான தொழிலாளர்களை கொண்ட கட்டுமானம் மற்றும் ஜவுளித்துறை போன்றவற்றில் உடனடியாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது சுகாதாரம் உள்ளிட்ட துறைகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று ஜோஷி கூறுகிறார்.
வீழ்ச்சியடையும் நுகர்வு
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றிய மத்திய அரசின் சமீபத்திய தரவுகளை பார்க்கும்போது, நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்வது தெரிகிறது.
சீனாவை போன்றில்லாமல், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய பொருளாதாரம் உள்நாட்டு நுகர்வை மையமாக கொண்டே வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால், சமீபத்திய மாதங்களில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் தரவுகளை பார்க்கும்போது, நுகர்வோரின் பணம் செலவிடும் வீதம் வீழ்ச்சியடைந்து வருவது புலனாகிறது.
குறிப்பாக பார்த்தோமானால், எஸ்யுவி ரக கார்களின் விற்பனை கடந்த ஏழாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, ட்ராக்டர், இருசக்கர வாகனங்களின் விற்பனையும் சரிவை கண்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவரின் வளர்ச்சி கடந்த காலாண்டில் இறக்கமடைந்துள்ளது.
முன்னதாக, நுகர்வோரின் வாங்கும் வீதத்தை அதிகரிக்கும் வகையில், தனது கட்சி தலைமையிலான அரசு வருமான வரி வீதத்தை குறைக்கும் என்று உறுதியளித்திருந்தது.
- இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் குறைந்து விட்டனவா? #RealityCheck
- அதிக விமான நிலையங்களை கட்டியுள்ளதா பாஜக அரசு?
இந்நிலையில், அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள மோதி தலைமையிலான இரண்டாவது அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில், தனிநபர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியையும் குறைக்க வேண்டுமென்று கூறுகிறார் தரகு நிறுவனமொன்றின் துணை தலைவர் கவுரங் ஷெட்டி.
"வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை இருக்கும்" என்று அவர் கூறுகிறார்.
இந்தியாவின் நிதிநிலையில் நிலவும் 3.4 சதவீத பற்றாற்குறை, பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு குறைவான தெரிவுகளையே மோதிக்கு கொடுக்கும்.
தத்தளிக்கும் விவசாயம்

நரேந்திர தலைமையிலான முதலாவது அரசிற்கு விவசாயத்துறையை கையாள்வதுதான் மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது. பயிர்களுக்கு அதிக விலை, கடன் தள்ளுபடி போன்றவற்றை வலியுறுத்தி நாடுமுழுவதும் விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், அனைத்துவித விவசாயிகளுக்கும் வருமான ஆதரவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம் என்று முன்னதாக பாஜக உறுதியளித்திருந்தது.
- மோதியின் ஏழைப் பெண்களுக்கு சிலிண்டர் எரிவாயு வழங்கும் திட்டம் வெற்றியா? #RealityCheck
- இந்திய ரூபாயின் பண மதிப்பிழப்பு அறிவிப்பு பலனளித்ததா?
"விவசாயிகளுக்கு வருமான ஆதரவு வழங்கும் திட்டங்கள் நீண்டகால அடிப்படையில் எவ்வித பலனையும் தராது" என்று கூறுகிறார் ஜோஷி.
நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் மாநில அரசு நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலையில் தங்களது விளைச்சல்களை விற்பனை செய்யும் சூழல் இருந்து வருகிறது. அந்நிலையை மாற்றி, விவசாயிகள் நேரடியாக சந்தைகளுக்கு பொருட்களை எடுத்துச்சென்று விற்பனை செய்யும் போக்கை உண்டாக்கினால் அது குறிப்பிடத்தக்க மாற்றத்தை உண்டாக்கக் கூடும் என்று கூறுகிறார் ஜோஷி.
இந்தியாவின் முதுகெலும்பாக திகழும், விவசாயத்துறையை நிலைநிறுத்துவதற்குரிய நடவடிக்கைகள் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தனியார்மயமாக்கல்
சாலை கட்டமைப்பு, ரயில்வே வளர்ச்சி மற்றும் பிற கட்டமைப்பு துறைகளை 1.44 ட்ரில்லியன் டாலர்களை செலவு செய்வோம் என்பதே பாஜக தலைமையிலான மத்திய அரசின் முக்கிய உறுதிமொழிகளில் ஒன்று. ஆனால், அந்த தொகையின் பெரும்பாலான அளவு தனியார் துறையிடமிருந்தே பெறப்படும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கடனில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டத்தில் மோதியின் அரசு ஓரளவு முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
தற்போது இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள மோதி, நாட்டில் தனியார்மயமாக்கத்தை முழுவீச்சில் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறுகிறார் கவுரங் ஷெட்டி.

"கடந்த சில வாரங்களாக முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சரிவிலுள்ள நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்யலாம்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
நாட்டின் கொள்கைகளை வலுப்படுத்துவதன் மூலம், மென்மேலும் அன்னிய முதலீடுகளை கவர முடியுமென்று நிபுணர்கள்
கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் தனியார் துறை எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சியை காணவில்லை என்றபோதிலும், அரசின் நேரடி முதலீட்டை மையமாக கொண்டே பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருந்து வந்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளே, நீண்டகால அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்று வல்லுநர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
_____Reference | Copyrights_____
Copyrights of this Post (Article & Image) belong to : https://www.bbc.com/tamil/india-48482405
Post a Comment