கீழடியில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு: தோண்ட, தோண்ட தொல்பொருட்கள்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ்: 'கீழடியில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு'
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 5-ம் கட்ட அகழாய்வில் அருகருகே 2 சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கீழடியில் 2015-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வை மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல் பொருட் கள் கண்டறியப்பட்டன. இவற்றை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்துள்ளது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை 2-ம் கட்ட மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. இந்த அகழாய்வு துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் கடந்த ஆண்டு ஏப்.18 முதல் செப். 30 வரை நடைபெற்றது. தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வுக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு அனுமதி வழங்கியது.

நிதி ஒதுக்கீடு தாமதம், மக்களவைத் தேர்தல் போன்ற காரணங் களால் அகழாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு ரூ.47 லட்சம் ஒதுக்கப்பட்டு, ஜூன் 13-ல் பணிகள் தொடங்கின. இந்நிலை யில், கருப்பையா என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் முதற்கட்டமாக 4 குழிகள் தோண்டியதில் 5 மீட்டர் ஆழத்தில் பழங்கால மண்பாண்ட ஓடுகள், பானைகள், அழகுப் பொருட்கள் கிடைத்தன.
முருகேசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் நேற்று குழிகளைத் தோண்டியபோது 2 அடி ஆழத்திலேயே நீண்ட சுவர் ஒன்று தென்பட்டது. அதனருகே பாதி அளவுக்கு மற்றொரு சுவரும் இருந்தது.
இந்த இரண்டு சுவர்களிலும் மூன்று அடி நீளம், ஒரு அடி அகலம், 10 செ.மீ. உயரம் கொண்ட செங்கற்கள் இருந்தன. கற்கள் நல்ல உறுதித் தன்மையுடன் உள்ளன. 'இந்தச் சுவர் கட்டிடத்தின் மேற்பகுதியா, கீழ்பகுதியா என்று கண்டறிய முடிய வில்லை. முழுமையாகத் தோண்டிய பிறகுதான் உறுதியாகக் கூற முடியும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
5-ம் கட்ட அகழாய்வு தொடக்கத்திலேயே இரட்டைச் சுவர் கண்டறியப்பட்டுள்ளதால் தோண்ட, தோண்ட அதிக எண்ணிக்கையில் தொல்பொருட்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
_____Reference | Copyrights_____
Copyrights of this Post (Article & Image) belong to : https://www.bbc.com/tamil/india-48767513
Post a Comment