அமெரிக்கா மற்றும் இரான் இடையே வலுக்கும் பதற்றம்: என்ன காரணம்?

ஓமன் வளைகுடாவில் இரண்டு எண்ணை டாங்கர்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என இரான் கூறியிருப்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார்.
சிறிய படகில் வந்த இரானிய படையினர் வெடிக்காத குண்டுகளை கப்பலுக்கு அருகில் வந்து சேகரிப்பது போலான காணொளியை அமெரிக்கா வெளியிட்டிருந்ததை டிரம்ப் சுட்டிக்காட்டி பேசினார்.
ஐ.நா பொதுச் செயலர் ஆண்டானியோ கட்டரஸ் உண்மை என்னவென்று தெளிவாக கண்டறியப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
"அவசரமாக முடிவுகளுக்கு வரவேண்டாம்" என ரஷ்யா எச்சரித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டில் கடற்கரை பகுதிகளில் நான்கு எண்ணெய் டாங்கர்கள் மீது தாக்குதல் நடத்தி ஒரு மாதத்திற்கு பிறகு இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த தாக்குதலுக்கு அமெரிக்கா இரான் மீது குற்றம் சுமத்தியது. ஆனால் எந்த ஆதரமும் ஒப்படைக்கவில்லை. இரான் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
ஜப்பான் மற்றும் நார்வே நிறுவனங்களுக்கு சொந்தமான அந்தக் கப்பல்களில் வெடிப்பு நடந்தபின், அப்பகுதியில் இருந்த தங்களுக்கு அவசர அழைப்பு வந்தாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே என்ன பதற்றம்?
2017ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்ததிலிருந்து அமெரிக்கா மற்றும் இரான் இடையே பதற்றங்கள் நிலவி வருகின்றன.
ஒபாமா அதிபராக இருந்த சமயத்தில், ஏற்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை டிரம்ப் ரத்து செய்தார். மேலும் இரான் மீதான தடையை வலுப்படுத்தினார்.
2018ஆம் ஆண்டு இரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக, 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிறப்புமிக்க ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது.
இந்த நடவடிக்கை பல நாடுகளால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அமெரிக்காவின் கூட்டணி நாடுகளும் கூட இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தன.
மே மாதம் டிரம்ப், இரான் மீதான தடைகளை வலுப்படுத்தினார் குறிப்பாக எண்ணெய் வர்த்தகத்தில். அதன்பிறகு அணுஆயுத ஒப்பந்தத்தின் படி ஏற்பட்டுள்ள சில விதிகளை தகர்த்து கொள்வதாக இரான் தெரிவித்தது.
_____Reference | Copyrights_____
Copyrights of this Post (Article & Image) belong to : https://www.bbc.com/tamil/global-48645438
Post a Comment