Header Ads

Ads Bar

கோவையில் கைது செய்யப்பட்டது ஐ.எஸ் பயங்கரவாதிகளா? நடந்தது என்ன?

கோவையில் ஐஎஸ் பயங்கரவாதிகள்படத்தின் காப்புரிமைAFP CONTRIBUTOR
இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளியோடு சமூக வலைதளத்தில் நட்பில் இருந்ததாகவும், ஐஎஸ் பயங்கரவாத கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்புவதாகவும் சில நபர்களின் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்களின் மீதான விசாரணைகளும், சோதனைகளும் கோவையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகின்றது.
புதன்கிழமை (12.06.2019) அன்று அதிகாலை உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் சில வீடுகளின் முன்பு திடீரென்று காவல்துறையினர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு இருந்தனர்.
விசாரணைக்காக கொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர்களில் ஷேக் இதயதுல்லா கைது செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

என்ன நடந்தது?

உக்கடம் , திருமறைநகர், குனியமுத்தூர், அல் அமீன் காலனி, சுண்ணாம்பு கால்வாய், பொன்விழா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆறு வீடுகளிலும், கரும்புக்கடை பகுதியில் க்யூப்லா என்ற ஒரு டிராவல் ஏஜென்சி அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.
இந்தப் பகுதி அனைத்துமே பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வாழ்கின்ற பகுதி. சோதனை நடைபெறுகின்ற பொழுது இப்பகுதியில் பரபரப்பான சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. அதிகாலை தொடங்கி மாலை 4.30 மணி வரையிலும் சோதனைகள் நடைபெற்றன.
பின்பு இங்கிருந்து மொகமது அசாருதீன், சேக் இதயத்துல்லா, இப்ராகிம், அக்ரம் சிந்தா, சதாம் உசைன், அபுபக்கர் ஆகிய ஆறு நபர்களை புலனாய்வுத் துறையினர் அழைத்து சென்று கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில், தற்காலிகமாக வாடகைக்கு எடுத்துள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் வைத்து விசாரணையை தொடர்ந்தனர்.

இஸ்லாமியர்கள் கோபம்

கோவையில் ஐஎஸ் பயங்கரவாதிகள்படத்தின் காப்புரிமைINDRANIL MUKHERJEE
இந்த அலுவலகத்தின் அருகில், சில இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் பிபிசி தமிழ் விசாரித்தது. அந்த இடத்தில் இஸ்லாமிய மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.
"எங்கள் பகுதிகளில் போலீஸார் அடிக்கடி இப்படி சோதனைகளை நடத்துகின்றனர். எங்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் நாங்கள் வாழ்கின்ற இடங்களுக்கு வந்து விடுகின்றனர். எப்போதும் எங்களை சந்தேகத்தோடே பார்க்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இங்கு கூடியுள்ளோம்" என்றனர். ஆனால், சிறிது நேரத்தில் காவல்துறையினர் அந்தக் கூட்டத்தை கலைத்துவிட்டனர்.
நீண்ட சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகு, கடந்த 12ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல், மொகமது அசாருதீனை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது.
மொகமது அசாருதீன் என்ற 32 வயதான இந்த நபர் உக்கடம் அன்பு நகரில் வசித்து வருகிறார். கரும்புக்கடையில் உள்ள க்யுப்லா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் அலுவலகத்தில் பணிபுரிகின்றார்.

ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட தொடர்பு

தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்ற இடங்களில் இந்த அலுவலகமும் ஒன்று. கைது செய்யப்பட்ட மொகமது அசாருதீன் "khilafah gfx" என்ற தனது முகநூல் பக்கத்தின் வழியாக ஐஎஸ் பயங்கரவாத கருத்துகளை பரப்பியுள்ளார் என்றும் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக இருந்த சஹ்ரான் ஹாஷிம் உடன் முகநூல் நண்பராக இருந்து அவர் வெளியிட்ட தீவிரவாத காணொளிகளை சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார் என்றும் தேசிய புலனாய்வுத் துறை தெரிவிக்கின்றது.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஆறு பேரில் , அந்தக் குழுவின் செயல்களுக்கு மொகமது அசாருதீன் தான் மூலமாக செயல்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. மேலும், மொகமது அசாருதீனின் மீது கடந்த 30ம் தேதியே தேசிய புலனாய்வு முகமை வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.

யார் யார் மீது குற்றச்சாட்டு?

அசாருதீன் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தினை போலவே தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் நிகழ்த்த வேண்டும் எனும் நோக்கில் செயல்படுவதாகவும், அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்த ஆள் திரட்டும் வேளைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அசாருதீன் வசிக்கின்ற பகுதிகளில் உள்ள நபர்களோ , அவரது வீட்டில் உள்ளவர்களோ இது குறித்து பேச விருப்பமில்லை என்று தெரிவிக்கின்றனர். பயங்கரவாத தடுப்பு சட்டம் , பிரிவு 18, 18பி,38,39 அதாவது தீவிரவாத இயங்கங்களோடு தொடர்பில் இருப்பது , உதவி செய்வது, பயங்கரவாத கருத்துக்களை பரப்புவது போன்ற குற்றங்கள் அடிப்படையில் மொகமது அசாருதீன் கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை குறிப்பிடுகின்றது.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மற்ற நபர்களில் ஒருவரான 26 வயதுடைய அக்ரம் சிந்தா குனியமுத்தூரில் வசித்து வருகின்றார். கோவையில் நகைக்கடை வைத்துள்ளதாக கூறப்படும் இந்த நபரின் மீது முன்னதாக கொலைக் குற்றச்சாட்டு உள்ளது. கோவையில் இறை மறுப்பு கொள்கை கொண்ட பாரூஹ் என்பவர், கடவுள் மறுப்பு கொள்கைகளை சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றார் என அவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் அக்ரம் சிந்தா, சம்பந்தப்பட்டு இருப்பதாக வழக்கு உள்ளது.
கோவையில் ஐஎஸ் பயங்கரவாதிகள்
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இப்ராகிம், ஐஎஸ்ஐஎஸ் காசர்கோடு வழக்கில் கைது செய்யப்பட்ட ரியாஸ் அபுபக்கரோடு நெருக்கமாக இருந்துள்ளதாக தேசிய புலானய்வு துறை குறிப்பிடுகின்றது. ரியாஸ் அபுபக்கர் தேசிய புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்தபோதுதான் சஹ்ரான் ஹாஷிமின் உரைகளை ஒரு வருடத்திற்கும் மேலாக கேட்டு வருவதாக கூறியதோடு, கேரளாவில் தற்கொலை குண்டுவெடிப்புக்கு தான் தயாராக இருந்ததாக ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வுத் துறை முன்னரே செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த நபரோடு இப்ராகிம் நெருக்கமாக இருந்துள்ளதாலும், அசாருதீன் குழுவில் இருந்ததாலும் இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
மேலும், 38 வயதான ஷேக் இதயத்துல்லா, 29 வயதான அபுபக்கர், 26 வயதான சதாம் உசைன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட மொகமது அசாருதீனை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, கொச்சின் அழைத்து செல்லப்பட்டார். மேலும், மற்ற ஐந்து நபர்களையும் சம்மன் கொடுத்து கொச்சினுக்கு வரவழைத்து விசாரணை தொடர்கிறது.
தேசிய புலனாய்வு முகமையின் சோதனையை அடுத்து, வியாழக்கிழமை காலை, மேலும் மூன்று இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஈடுபடவில்லை மாறாக மாநகர காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவினர் இந்த சோதனைகளை நடத்தினர்.
மொகமது உசைன், ஷாஜகான், சபியுல்லாஹ் ஆகியோரின் இல்லங்களில் சோதனை நடைபெற்றது. நேற்று காலை ஏழு மணியில் இருந்து மாலை 3.30 வரை இந்த நபர்களின் வீடுகளில் சோதனை தொடர்ந்து நடைபெற்றது. பின்பு இந்த மூன்று நபர்களும் நுண்ணறிவுப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு விசாரணையை தொடர்ந்தனர். இந்த மூவரும் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் மற்றும் சிரியா அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள் என்றும், இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் கொள்கைகள் மற்றும் தீவிரவாத செயல்களை உள்நோக்கத்துடன் இளைஞர்களிடையே சமூக வலைத்தளங்கள் மூலமாக பரப்பியும், இவ்வமைப்பிற்கு அடித்தளம் அமைத்து மேற்படி அமைப்பின் சார்பில் தீவிரவாத செயல்களை கோவையில் அரங்கேற்ற சதித் திட்டம் தீட்டி வருவதாக தகவல் கிடைத்ததாக காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இவர்கள் இலங்கையில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய சஹ்ரான் ஹாஷிமின் செயல்களை புகழ்ந்து வருவதாக தகவல் கிடைத்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கோவையில் ஐஎஸ் பயங்கரவாதிகள்படத்தின் காப்புரிமைNURPHOTO
முதல் நாள் சோதனையில் சோதனை இடைப்பட்ட வீடுகளில் இருந்து அலைபேசிகள், மெமரிகார்டுகள், மடிக்கணிகள், ஹார்டு டிஸ்க்குகள், குறுந்தகடுகள், ஏர் கன் பெல்லட்டுகள், பிஎப் ஐ போன்ற இஸ்லாமிய அமைப்புகளின் துண்டறிக்கைகள் கைப்பற்றப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை அறிவித்தது. இவை அனைத்தும் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி சோதனை செய்யப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இரண்டாம் நாள் சோதனையில் விசாரணைக்கு உட்பட்டுத்தப்பட்டு இருக்கும் மூன்று நபர்களின் வீடுகளில் இருந்தும் பல அலைபேசிகள், மெமரிகார்டுகள், பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
தேசிய புலனாய்வுத் துறை மொகமது அசாருதீன் உட்பட்ட ஆறு பேரையும் கொச்சினில் வைத்து விசாரித்து வரும் நிலையில், இன்று மீண்டும் தேசிய புலனாய்வு முகமை சில நபர்களை விசாரிக்க இருக்கின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து, இந்தப்பகுதிகளில் சோதனைகள் நடைபெற்று கொண்டிருப்பதால் இங்குள்ள மக்கள் இதுகுறித்து பேசத் தயங்குகின்றனர்.
பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர், இந்த நபர்கள் யாரும் பெரிய பொருளாதார பின்புலம் கொண்டவர்கள் இல்லை. இதற்கு முன்பு, இவர்கள் யாரும் பெரிய அளவில் வெளியில் செயல்பட்டதாகவும் தெரியவில்லை. இதுபோன்ற நபர்கள் சமூக ஊடகங்களில் செய்யப்படுவது அவர்களின் குடும்பங்களுக்குக்கூட தெரியாது, விசாரணைகளால் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அச்சமுற்று இருக்கின்றனர் என்றார்.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரியிடம், இப்போதைய சூழல் குறித்து கேட்டபோது, விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கின்றது என்றார்.
_____Reference | Copyrights_____

Copyrights of this Post (Article & Image) belong to : https://www.bbc.com/tamil/india-48636958

No comments

Powered by Blogger.