Header Ads

Ads Bar

தேர்வில் தோல்வியால் 22 மாணவர்கள் தற்கொலை - என்னதான் நடக்கிறது தெலங்கானாவில்?

சகோதரியோடு அனாமிகா
Image captionதனது சகோதரியோடு அனாமிகா
ராணுவ அதிகாரி, அறநெறியுடன் செயல்படும் இணையதள ஹேக்கர், விமானப் பொறியாளர், மருத்துவர், பொறியாளர் என்ற கனவுகளுடன் இருந்த மாணவ மாணவிகள்தான் தெலங்கானா இன்டர்மீடியேட் கல்வி வாரிய தேர்வு முடிவுகளுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, 16 முதல் 18 வயதுக்கு உள்பட்ட 22 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். இன்டர்மீடியேட் கல்வி என்பது பிளஸ் டூ அல்லது மேல்நிலை கல்விக்கு இணையானது.
எதிர்கால கனவுகளுடன் இருந்த மாணவ, மாணவியர்கள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணமாக இருந்தது எது என்பதைப் புரிந்து கொள்ள சில மாணவர்களின் குடும்பத்தினருடன் பிபிசி தெலுங்கு சேவை பேசியது.
ஏ. அனாமிகா யாதவ், வயது : 16
"இன்டர்மீடியேட் கல்வி வாரிய தேர்வு முடிவுதான் என் சகோதரியின் மரணத்துக்குக் காரணம். அவருடைய மதிப்பெண்களை எப்படி சரியாகக் கணக்கிடத் தவறியிருக்கலாம். கல்வி வாரியத்துக்கு எதிராக நாங்கள் வழக்கு தொடர்வோம்'' என்று கோபத்துடன் கூறினார் உதயா.
சில வாரங்களுக்கு முன்பு உதயாவையும் அவருடைய குடும்பத்தினரையும் நாங்கள் சந்தித்தபோது, தனது சகோதரி இறந்துவிட்டார் என்பதை உதயா ஏற்றுக் கொண்டுவிட்டார் என்பதைப் போலதான் இருந்தார்.
அனாமிகாவின் தந்தை
Image captionஅனாமிகாவின் தந்தை
ஆனால் இப்போது கோபத்துடன் இருந்தார். தனது சகோதரியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிறார். மதிப்பெண்களை கல்வி வாரியம் சரி பார்த்தபோது, முதலில் அறிவிக்கப்பட்டதைவிட அனாமிகா 28 மதிப்பெண்கள் அதிகம் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
அனாமிகாவின் பாட்டி
Image captionஅனாமிகாவின் பாட்டி
``புல்வாமா தாக்குதல் நடந்த நாளில், அன்றைய தினம் முழுக்க அனாமிகா தொலைக்காட்சி முன்புதான் அமர்ந்திருந்தாள். அழுது கொண்டே இருந்தாள். ஏன் அழுகிறாய் என நான் கேட்டபோது, உயிர்த் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினருக்காக வருத்தப்படுவதாகக் கூறினாள்'' என்று அனாமிகாவின் பாட்டி உமா தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட பாட்டியின் வீட்டில் அனாமிகா வளர்ந்தார். அலமாரியில் வைத்திருந்த கோப்பைகளைக் காட்டிய உமா, படிப்புக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் பங்கேற்பதில் அனாமிகாவுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது என்று கூறினார்.
அனாமிகா
"அம்மம்மா, வெறும் படிப்பு மட்டும் எனக்கு உதவியாக இருக்காது. வேண்டிய நேரத்தில் நான் படிப்பேன் என்று அவள் சொல்வாள்'' என்று உமா குறிப்பிட்டார். "ஆனால், கல்லூரிக்குச் செல்ல ஒரு நாள்கூட தவறியது கிடையாது. இரவு நேரங்களில் சமையலறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பாள்'' என உமா தெரிவித்தார்.
என்.சி.சி. சீருடையில் அனாமிகா இருக்கும் புகைப்படங்களும், ஏராளமான கோப்பைகளும் அலமாரியில் உள்ளன. வரவேற்பறையில் குடும்பத்தினரின் புகைப்படங்களுடன் அவை வைக்கப்பட்டுள்ளன.
அனாமிகா
ஹைதராபாத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் என்.சி.சி. மாணவர்களில் ஒருவராக அனாமிகா பங்கேற்றிருக்கிறார். அனாமிகாவின் பெற்றோர் அடிலாபாத்தில் வசிக்கின்றனர்.
அவருடைய தந்தை கணேஷ் அங்கு சிறு வணிகம் செய்து வருகிறார். "யாரும் விரும்பக்கூடிய சிறந்த மகளாக அனாமிகா இருந்தாள். நான் மாற்றுத் திறனாளி. அப்பா நான் ராணுவ அதிகாரியாகி உங்களை கவனித்துக் கொள்வேன்' என்று அவள் சொல்வாள் என்று கணேஷ் கூறினார்.
அவள் குறும்புத்தனம் உடையவள். விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது, எல்லோருடனும் வீட்டைச் சுற்றி ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பாள் என்று புன்னகையுடன் கூறிய கணேஷ், கண்ணீர் சிந்துவதை தவிர்க்க சிரமப்பட்டார்.
அனாமிகா படித்த பள்ளிக்கூடத்தில் விளையாட்டுப் பயிற்சியை எந்த அளவு மேற்கொண்டார் என்று உமா விவரித்தார்.
"அவளுடைய ஆசிரியர்கள் அவளை மிகவும் நேசித்தனர். அவளின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க அவர்கள் வந்து கொண்டே இருந்தார்கள். கல்லூரிக்குச் சென்ற பிறகும், தான் படித்த பள்ளிக்கூடத்தில் பந்து எறிதல், கபடி, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி கொடுத்து வந்தாள்'' என அவர் தெரிவித்தார்.
பெற்ற வெற்றிகள்
டெல்லியில் குடியரசு தின என்.சி.சி. அணிவகுப்பில் பங்கேற்கும் பயிற்சிக்காக அனாமிகா டெல்லி செல்லவிருந்தார். அணிவகுப்பில் பங்கேற்பவர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளின் முடிவுகள் வருவதற்காக அவள் காத்திருந்தாள்.
"இளம் பெண்ணே என்று என்னை அனாமிகா கேலி செய்வாள். நன்றாகப் புரிதல் உள்ள குழந்தை அவள். சிக்கன் வறுவல் அவளுக்குப் பிடிக்கும். ஆனால் எங்களிடம் போதிய பணம் இல்லாத சமயங்களில், காய்கறிகள் சாப்பிட்டுக் கொள்வதாக அவள் கூறுவாள். தனக்குப் பிடித்தமான Shin Chand மற்றும் Doraemon கார்ட்டூன்களில் வருவதைப்போல அவர் குரல் மாற்றிப்பேசுவாள்'' என்று கூறுகிறார் உமா.
சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுக்கு அருகில் வசித்த ஒரு பெண், அவருடைய தாத்தா திட்டியதால் தற்கொலை செய்து கொண்டபோது அனாமிகா சொன்னதை உமா நினைவுகூர்ந்தார்.
யாரோ திட்டியதற்காக வாழ்க்கையை முடித்துக் கொள்வது சரியானது கிடையாது என்று அப்போது அனாமிகா கூறினாளாம்.
சான்றிதழ்
அன்றைய தினம் அனாமிகாவுடைய பாட்டியின் உறவினர்கள் வந்திருந்தனர். அருகில் இரண்டு வீடுகள் தள்ளி இருக்கும், அத்தையின் வீட்டுக்கு அனாமிகா சென்றிருந்தாள்.
"அவளுடைய தேர்வு முடிவுகள் வெளியானது பற்றி எனக்குத் தெரியாது. இங்கே படுப்பதற்கு இடம்போதாது என்பதால், தூங்குவதற்காக அங்கே சென்றிருக்கிறாள் என்று நான் நினைத்திருந்தேன். மாலையில் டீ குடிப்பதற்காக அவளை கூப்பிடுவதற்கு நான் சென்றேன். சிறிது நேரத்தில் வருவதாக அவள் சொன்னாள். ஆனால் அவள் வராமலே போய்விட்டாள்'' என்றார் உமா.
டீ குடிக்க மறுபடி கூப்பிட உமா சென்றபோது, மின் விசிறியில் அனாமிகா தூக்கு மாட்டித் தொங்கிக் கொண்டிருந்தாள்.
தோட்டா வெண்ணிலா: வயது : 18
இவருடைய தந்தை நுகர்வோர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்க்கிறார்
இன்டர்மீடியேட் இரண்டாவது ஆண்டு - சிஇசி (வணிகவியல், பொருளாதாரம், குடிமையியல்)
தனியார் கல்லூரியில் படித்தவர் இவர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு வெண்ணிலாவுக்கு எப்படி பயிற்சி அளித்தார் என்பதை ஈரமான கண்களுடன் விவரித்தார் வெங்கடேஷ்.
"அடிப்படையான விஷயங்களை மட்டும் அவளுக்கு சொல்லிக் கொடுத்து, என்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றேன். ஒரு நாள் காலையில், எங்கள் தந்தையின் மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வெளியில் சென்றுவிட்டாள். அப்போது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். வண்டி ஓட்டியது பற்றி அவள் என்னிடம் சொன்னாள்'' என்று வெங்கடேஷ் தெரிவித்தார்.
"கவலையடைந்த நான் மறுபடி ஓட்டிக் காட்டச் சொன்னேன். நான் பின் சீட்டில் அவளுடன் அமர்ந்து கொண்டேன். தேர்ந்த ஒருவரை போல அவள் மோட்டார் சைக்கிள் ஓட்டியதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். இருந்தபோதிலும், அவள் பத்திரமாகச் செல்கிறாளா என்பதை உறுதி செய்வதற்காக, அவளுக்குத் தெரியாமல் அவளைப் பின் தொடர்ந்து செல்வேன். கிராமத்துக்கு வெளியே நிலப்பகுதியில் அவள் ஓட்டிச் செல்வாள். தோழியின் திருமணத்துக்கு மோட்டார் சைக்கிள் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஒருமுறை அவள் விரும்பினாள். நான் அவளுக்கு ஆதரவாக எங்கள் தந்தையிடம் பேசி அனுமதி பெற்றுத்தந்தேன்'' என்று அவர் மேலும் கூறினார்.
வெண்ணிலாவைவிட ஒரு வயது மூத்தவர் வெங்கடேஷ். கடந்த ஆண்டு வணிகவியல் மற்றும் சிவிக்ஸ் பாடங்களில் தேர்ச்சி பெற முடியாமல் போய்விட்டது.
வெண்ணிலா பெற்றோர்
"`இந்த ஆண்டு நானும், சகோதரியும் தேர்வுக்கு ஒன்றாகத் தயார் செய்தோம். சொல்லப்போனால், அவளுடைய சில தோழிகளும் சந்தேகங்களை தீர்த்து கொள்ள இங்கே வருவார்கள். கஷ்டமான விஷயங்களையும் எளிதில் நினைவில் வைத்துக் கொள்வதற்கு சில குறுக்கு வழிகளை அவள் சொல்லிக் கொடுப்பாள்'' என்று தெரிவித்தார் வெங்கடேஷ்.
பட்டப்படிப்பு முடிக்க வேண்டும் என்று வெண்ணிலா விரும்பினாள்.
"திருமணம் செய்து கொள்வது பற்றிப் பேசினாள் என்னிடம் கோபித்து கொள்வாள். திருமணத்தைவிட வாழ்க்கையில் முக்கியமான வேறு விஷயங்கள் இருக்கின்றன என்று சொல்வாள். ஒரு பட்டம் பெற்றால் சமூகத்தில் தனக்கு மரியாதை கிடைக்கும் என்பாள். வெண்ணிலா பிறந்தபோது நான் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டேன். அவளுடைய திருமணத்திற்காக நான் பணம் சேமித்தேன். ஆனால் தன்னுடைய படிப்புக்கு செலவிடுமாறு அவள் என்னிடம் கூறுவாள்'' என்று தெரிவித்தார் வெண்ணிலாவின் தந்தை டி. கோபாலகிருஷ்ணா.
அவர் நிஜாமாபாத்தில் நுகர்வோர் நீதிமன்றத்தில் அட்டெண்டராக வேலை பார்க்கிறார்.
தன்னுடைய மணி பர்ஸை திறந்து அதில் சகோதரியின் படத்தைக் காட்டினார் வெங்கடேஷ். எப்போதும் தன்னுடன் அந்தப் படத்தை வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். "நாங்கள் சண்டை போட்டுக் கொள்வோம். சில நேரம் வெறுப்பேற்றுவதற்காக போலியாக சண்டையிடுவோம். மோட்டார் சைக்கிளுக்காக அவள் என்னுடன் சண்டை போடுவாள். நான் எப்போது நகருக்குச் சென்றாலும், சாலையோரக் கடைகளில் தின்பண்டங்கள் வாங்கி வரும்படி கூறுவாள். பானிபூரி அவளுக்குப் பிடிக்கும். இனிமேலும் என்னால் பானிபூரி சாப்பிட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை'' என்றார் வெங்கடேஷ்.
வெண்ணிலாவின் உறவுமுறை சகோதரியான அமுல்யா பத்தாம் வகுப்பு முடித்திருக்கிறார். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது வெண்ணிலாவுடன் அவர் இருந்துள்ளார்.
"இடைநிலைக் கல்வியில் கணிதத்தை பிரதானப் பாடமாகக் கொண்ட பிரிவைத் தேர்வு செய்யுமாறு அக்கா எனக்கு அறிவுரை கூறினார். நான் நன்றாக கணக்கு படிப்பதால், அதன் மூலம் எனக்கு நல்ல எதிர்காலம் அமையும் என்று கூறினார். எப்போது எங்கள் வீட்டுக்கு அவர் வந்தாலும், எங்களுக்குப் பிடித்த உணவுகளை சமைப்பார். நாங்கள் காமெடி நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டிருப்போம். எங்களை சிரிக்க வைப்பதற்காக அவர் ஜோக்குகள் சொல்லிக் கொண்டிருப்பார்'' என்று அமுல்யா கூறனார்.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில், வெண்ணிலா தனது வழக்கமான வேலைகளில் ஈடுபட்டிருந்தார். மாலையில் தனது தந்தையின் செல்போன் மூலம், தேர்வு முடிவுகளைப் பார்த்திருக்கிறார். முடிவுகளைப் பார்த்ததும் அதுபற்றி அவருடைய தாயார் எங்களிடம் சொன்னார். தாம் பார்த்ததை வெண்ணிலாவால் நம்ப முடியவில்லை.
வெண்ணிலா
"நான் எப்படி தோல்வியடைய முடியும் என்று அவள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். நாங்கள் அவளுக்கு ஆறுதல் கூறினோம். பரவாயில்லை, நாம் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம், மறுபடி தேர்வு எழுதலாம் என்று ஆறுதல் கூறினோம். இரவு உணவு சமைப்பதற்காக நான் சமையலறைக்குச் சென்றுவிட்டேன்'' என்று வெண்ணிலாவின் தாயார் கூறினார்.
"அடுத்த நிமிடம் குளியலறையில் இருந்து அவள் அழுது கொண்டே ஓடி வந்தாள். எலி மருந்து சாப்பிட்டுவிட்டதாகக் கூறிய அவள், தேர்வில் தோல்வி அடைந்து விட்டதால் தம்மை சாக விட வேண்டும் என்றும் கூறினார். மருத்துவமனையில் இருந்தபோதும் கூட ``நான் பாஸ் ஆகி இருப்பேன்'' என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். தாம் வலுவாக இருந்த பாடங்களை தவறாகப் புரி்து கொண்டதால் அப்படி ஆகிவிட்டதா என்று அவள் கவலைப்பட்டாள்'' என்று அவர் மேலும் கூறினார்.
மாடம் பானிகிரண் - வயது : 18
குடும்பம் காய்கறி விற்று சம்பாதிக்கிறது.
இன்டர்மீடியேட் கல்வி இரண்டாவது ஆண்டு - எம்.பி.சி. (கணிதம், இயற்பியல், வேதியல்)
தனியார் கல்லூரியில் படித்தவர்
"`நாங்கள் அறநெறிசார்ந்த இணையதள ஹேக்கர்களாக உருவாக வேண்டும் என்று விரும்பினோம். யூடியூபில் பயிற்சி விடியோக்களைப் பார்த்து, அவற்றை நாங்கள் முயற்சி செய்து பார்ப்போம்'' என்று பானுகிரணுடன் படித்தவரும், உறவினருமான யுகேஷ் கூறினார்.
மாடம் பானிகிரண்
"நாங்கள் சில நாட்கள் இடைவெளியில் பிறந்தவர்கள். மழலையர் பள்ளியில் இருந்தே நாங்கள் ஒரே வகுப்பில்தான் படித்தோம். என் செயல்களில் அவனுக்கும் பங்கு இருக்கும். எனக்கு சிறந்த நண்பனாகவும், எல்லாமுமாக இருந்தான். நாங்கள் ஒன்றாகத்தான் கல்லூரிக்குச் செல்வோம். இருவருக்குமே கணிதம் பிடிக்கும். கம்பியூட்டர் மென்பொருள்களை அவன் நன்றாகப் புரிந்து கொள்வான். எனக்கு இதில் ஆர்வம் வந்ததற்கு அவன்தான் காரணம்'' என்று யோகேஷ் தெரிவித்தார்.
கிரணின் தந்தை சாரங்கபாணி காய்கறி வியாபாரம் செய்கிறார். இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அந்த வீட்டில், ஒரு மூலையில் வைத்திருந்த கித்தாரை அவர் காட்டினார். தன் மகனுக்கு இசையில் ஆர்வம் இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். கித்தாருடன் கிரண் இருக்கும் புகைப்படம் ஒன்று பிரேம் போட்டு வைக்கப் பட்டிருந்தது.
"சில விடியோக்களைப் பார்த்து அவன் கித்தார் கற்றுக்கொண்டான். பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளில் கித்தார் இசைப்பான். தெலுங்கு திரைப்படங்களில் இருந்து ஐந்தாறு பாடல்களை அவன் கித்தாரில் இசைப்பான்'' என்று சாரங்கபாணி கூறினார்.
கிரணின் தாயாரால் இந்த இழப்பில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. அவர்களுடைய ஒரே மகன் கிரண். சாந்தமாகப் பேசக் கூடியவன், நல்ல ஒழுக்கம் உள்ளவன் என்று கிரணை சொல்கிறார்கள்.
"தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக் கொள்வது அவனுக்குப் பிடிக்கும். நிறைய போஸ்களில் புகைப்படம் எடுத்துக் கொள்வான். இப்போது அந்தப் புகைப்படங்களைத்தான் எங்களுக்காக விட்டுச் சென்றிருக்கிறான்'' என்று கண்ணீரை அடக்கிக் கொள்ளும் முயற்சியுடன், தழுதழுக்கும் குரலில் கூறினார். அவருடைய தந்தை.
யுகேஷ்
யுகேஷும் கிரணும் தெலுங்கு திரைப்படங்கள் பார்ப்பதை விரும்புவார்கள். ``எங்களுக்குப் பிடித்தமான நடிகர் அல்லு அர்ஜுன். எங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எப்படியாவது அவருடைய திரைப்படங்களைப் பார்க்க முயற்சி செய்து பார்த்துவிடுவோம்'' என்றார் யுகேஷ்.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளன்று இரவு யுகேஷும் கிரணும் ஒரே அறையில் தூங்கினர். இரவு உணவின் போதே, கிரண் மன அமைதி இழந்திருந்ததைப் போல இருந்தான் என்று யுகேஷ் தெரிவித்தார். ``அவன் எப்போது எழுந்து வெளியில் சென்றான் என்று தெரியவில்லை. தேர்வு முடிவு பற்றி அன்று மாலை அவன் அதிகம் பேசவில்லை'' என்று யுகேஷ் குறிப்பிட்டார்.
கிரணின் சிதைந்துபோன உடல் பாகங்கள் ரயில் தண்டவாளத்தில் கண்டுபிடிக்கபபட்டன. நடு இரவில் வெளியே நடந்து சென்ற கிரண், ஓடும் ரயில் எதிரே குதித்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
தர்மா ராம்பத்துரு - வயது : 18
இன்டர்மீடியேட் கல்வி இரண்டாவது ஆண்டு - எம்.பி.சி. (கணிதம், இயற்பியல், வேதியியல்)
வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். விமான பொறியாளராக அல்லது விமானியாக வேண்டும் என்று விரும்பினார். பத்தாம் வகுப்பு படித்தபோது அவருடைய ப்ராஜெக்ட் நாசாவுக்கு தேர்வு செய்யப்பட்டது.
``Game of Thrones சீஷன் 8 நாங்கள் ஒன்றாகப் பார்க்க திட்டமிட்டிருந்தோம். அவனுக்குப் பிடித்த கேரக்டர் Jon Snow. சொல்லப்போனால், Avengers End game கூட ஒன்றாகப் பார்ப்பதற்குத் திட்டமிட்டிருந்தோம். அற்புதமான விஷயங்களை தீபுவிற்குப் பிடிக்கும்'' என்று சொன்னார் அருகில் வசிப்பவரும் தர்மா ராமின் நம்பிக்கைக்குரிய நண்பருமான நிவேதிதா.
அவரைவிட 5 வயது மூத்த சகோதரியான மஹிதா, அவருக்கு தீபு என செல்லப் பெயரிட்டுள்ளார்.
மஹிதா
"எங்கள் அம்மாவைவிட நான் தான் அதிகம் பிடித்தவள் என்று அவன் சொல்வான். அவனை தீபு என்று கூப்பிடுவதுதான் அவனுக்குப் பிடிக்கும். ஏனென்றால் அந்தப் பெயரை சொல்லித்தான் நான் கூப்பிடுவேன். அவன் எப்போதும் எல்லோரையும் ஈர்க்கும் நபராக இருப்பான். 6 முதல் 70 வரையானவர்கள் வரை அவனுக்கு நண்பர்கள் உண்டு. என் தோழியருடனும் பழகுவான். தங்களைவிட வயதில் இளையவன் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்தது கிடையாது. அவனிடம் முதிர்ச்சி இருந்தது'' என்று கூறினார் மஹிதா.
ஏதும் பிரச்சினை வந்தால் அமைதியாக எப்படி அதை சமாளிப்பது என்பதில் அவனுடைய திறமையைப் பார்த்து வியந்திருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார். தீபுவிடம் கல்லூரியில் விளையாட்டுத்தனம் அதிகம் இருந்தாலும், படிக்க வேண்டிய நேரத்தில் படிப்பில் கவனம் செலுத்துவான் என்று அவருடைய கல்லூரி நண்பர்கள் கூறினர்.
"நாங்கள் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள். ஆனால், கல்லூரியில்தான் நெருக்கமானோம். ஆசிரியர்களுடன் ஏதாவது பிரச்சினையில் சிக்கிக் கொள்வான். ஆனால் எப்போது, எந்த அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும்'' என்று கூறினார் தீபுவின் வகுப்பில் பயிலும் ஹர்ஷினி.
ஹர்ஷினி
தீபுவுக்கு கே.எப்.சி. சிக்கன் பிடிக்கும். நண்பர்களுடன் கே.எப்.சி. கடைகளுக்குச் செல்வான்.
"தீபு எப்போதுமே விளையாட்டுத்தனமாக இருக்க மாட்டான். பொறியியலில் எந்தப் பிரிவைத் தேர்வு செய்யலாம் என்று என்னிடம் அவன் கேட்பான். அவனுக்கு இயற்பியல் பிடிக்கும். அந்தப் பாடத்தை அவன் நேசித்தான்'' என்று கூறினார் தீபுவின் சீனியரான அபிராம்.
"ஜே.இ.இ. தேர்வில் தீபு 84% மதிப்பெண் பெற்றார். "விமானத்துறை தொடர்பான எல்லா விஷயங்களிலும் என் சகோதரனுக்கு ஆர்வம் இருந்தது. எனவே விமானத் துறையில் பொறியியல் படிக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். இந்திய விமானப் படையில் விமானியாக வேண்டும் என்ற விருப்பம் காரணமாக தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கும் அவன் தயாராகி வந்தான்'' என்று மஹிதா கூறினார்.
பல்வேறு தேர்வுகளுக்கான அட்டவணைகள், அதற்குப் படிப்பதற்கான திட்டமிடல் அட்டவணைகள் வைத்திருந்த தீபுவின் அறையை அவர் காட்டினார்.
மஹிதாவும் அவருடைய தாயாரும் தீபுவுடன் அமர்ந்து ஆறுதல் கூறியுள்ளனர். எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளனர்.
தர்மா ராம்பத்துரு
"அவன் தன்னுடைய ஆசிரியரை அழைத்து எப்போதிருந்து டியூசன் வர வேண்டும் என்று கூட கேட்டான். நாங்கள் எல்லோரும் எங்கள் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டோம். தீபு குளியல் அறைக்குச் சென்றான். அவனை தனியாக இருக்க விட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனால் திடீரென குதிக்கும் சப்தம் கேட்டது. குளியல் அறையில் இருப்பதாக நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த தீபு , பால்கனியில் இருந்து கீழே குதித்துவிட்டான்'' என்று தெரிவித்தார் மஹிதா.
வோட்னாலி ஷிவானி - வயது : 16
இன்டர் மீடியேட் முதலாவது ஆண்டு - எம்.பி.சி. (கணிதம், இயற்பியல், வேதியியல்)
தந்தை மாடு மேய்ப்பவர். தாயார் தினக்கூலித் தொழிலாளி
அரசுக் கல்லூரியில் கல்வி பயன்று வந்தவர்.
ஏறத்தாழ 15 நாட்கள் கழித்து நாங்கள் ஷிவானியின் பெற்றோரை சந்தித்தோம். அந்தத் தெருவில் நாங்கள் திரும்பியதுமே அவருடைய தாயார் கதறி அழுதததை நாங்கள் கேட்டோம். தெலங்கானாவின் கிராமத்தில் ஒற்றை மாடி வீடுகளுக்கு இடையில் கீற்று வேய்ந்த கூரை கொண்ட அவர்களுடைய வீட்டுக்குள் நாங்கள் சென்றோம். கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த வீட்டில் அந்தக் குடும்பம் வாடகைக்குக் குடியிருந்து வருகிறது. ஷிவானியின் புகைப்படத்துடன் `நான் பொறியாளராக விரும்புகிறேன்' என்று அச்சிட்ட போஸ்டரை லேமினேட் செய்து அவருடைய தாயார் லாவண்யா வைத்திருக்கிறார்.
லாவண்யாவின் தந்தை பூமா ரெட்டி அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டு, நாங்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு காது கேட்காது. அவருடைய மகளைப் பற்றி தான் நாங்கள் பேசுகிறோம் என்பதை அவர் புரிந்து கொண்டபோது, ``என் மகள் மிகவும் புத்திசாலி'' என்று கூறினார்.
ஷிவானி
ஷிவானி புத்திசாலி மாணவியாக இருந்திருக்கிறார். தங்களுக்கு ஏதும் சந்தேகம் வரும்போது ஷிவானியிடம் வந்து அதைத் தீர்த்துக் கொண்டு போவோம் என அவளுடைய நண்பர்கள் கூறினர். ``நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வது அவளுக்குப் பிடிக்காது. எனவே நாங்கள் தான் படிப்பதற்கு அவளுடைய வீட்டுக்கு வருவோம்'' என்று ஷிவானியின் தோழியரில் ஒருவரான அனிதா தெரிவித்தார்.
ஷிவானியும், அவளுடைய சகோதரியும் சமையலறையில் தான் ஆயத்தமாவார்கள். ஷிவானியின் செல்போனில் உள்ள படங்களை அவளுடைய சகோதரி காட்டினார். ``அக்காவுக்கு வளையல்கள் பிடிக்கும். பல நிறங்களில் வளையல்களை வாங்கி அணிந்து படம் எடுத்துக் கொள்வாள்'' என்று அவளைவிட 3 வயது இளையவளான அனுஷா தெரிவித்தார். படுக்கை அறையின் சுவரில், படிப்பதற்கான அட்டவணை மற்றும் தேர்வு அட்டவணையை ஒட்டியிருந்தார். ஷிவானி தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருப்பதாக அந்த அட்டவணையில் குறிப்பிட்டிருந்தது.
கடுமையாகப் படித்து பொறியாளராக வேண்டும் என்று ஷிவானி விரும்பியிருக்கிறாள். ``மாடு மேய்க்கப் போக வேண்டாம் என்று த்தையிடம் ஷிவானி கூறுவாள். அவருக்கு காது கேட்காது என்பதால் அப்படி சொல்வாள். ஐந்து வருடம் பொறுத்துக் கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கை மாறிவிடும் என்று கூறுவாள்'' என்றார் தாயார் லாவண்யா. அருகில் வசித்த சிலரும் அப்போது உள்ளே வந்தனர். ஷிவானி பயந்த சுபாவம் உள்ளவள், ஒழுக்கமான மாணவி என்று அவர்கள் அனைவரும் கூறினர்.
ஷிவானி தாய்
தேர்வு முடிவுகள் வெளியான நாளன்று இரவு ஷிவானி தன்னுடைய செல்போனை சகோதரிக்கு கொடுத்துவிட்டார். அதைப் பயன்படுத்துவதற்கான பாஸ்வேர்டையும் கூறியிருக்கிறாள். ``அக்கா எப்போதும் தன்னுடைய செல்போனை எனக்குத் தர மாட்டாள். செல்போனில் நேரத்தை செலவிடக் கூடாது, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறுவார். ஆனால் இனிமேல் நீயும் செல்போனை பயன்படுத்தலாம் என்று அன்றைக்கு கூறினார்'' என்று அனுஷா தெரிவித்தார்.
அதிகாலையில் வீட்டின் கூரையில் தூக்கு மாட்டிக் கொண்டு ஷிவானி தொங்கியதை அனுஷா தான் முதலில் பார்த்திருக்கிறார். ``இன்னும்கூட இரவில் என்னால் தூங்க முடியவில்லை'' என்கிறார் அனுஷா.
தேவசோத்து நீரஜா - வயது : 17
இன்டர்மீடியேட் முதலாவது ஆண்டு - பி.பி.சி. (உயிரியல், இயற்பியல், வேதியியல்)
அரசுக் கல்லூரியில் பயின்றவர். மலைவாழ் மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்
பெற்றோர் இருவரும் தினக்கூலி வேலைக்குச் செல்பவர்கள். உடன்பிறந்தவர்கள் ஐந்து பேர்.
தேவசோத்து நீரஜா
நீரஜா தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் தெலங்கானாவில் ஒற்றைப் படுக்கை அறையுள்ள வீட்டில் வசித்து வந்தார். மூத்த சகோதரிகள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இரண்டு தங்கைகள் அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். ``நீரஜா எனக்கு மிகவும் உதவியாக இருப்பாள். எனது ஆதரவை இழந்துவிட்டது போல உணர்கிறேன். நானும் கணவரும் அதிகாலையில் வேலைக்குச் சென்றுவிட்ட பிறகு, தம்பியை தயார் செய்வாள். சில நேரங்களில் சமையல் செய்துவிட்டு கல்லூரிக்குச் செல்வாள். இரவில் படிப்பாள்'' என்று அவருடைய தாயார் பாங்கி கூறினார்.
நீராஜாவுக்கு அதிகம் தோழிகள் கிடையாது. அவருடைய தந்தை ரூபால் சிங் வீட்டில் களிமண் தரையில் அமர்ந்து, மகளின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை எடுத்துக் காட்டினார். ``எல்லா தேர்வுகளையும் ஒரே முறையில் தேறியிருக்கிறாள். டாக்டராக வேண்டும் என்று விரும்புவதாக அவள் கூறி வந்தாள். அவளுக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தோம்'' என்று தெரிவித்தார் ரூபால் சிங்.
தேவசோத்து நீரஜாபடத்தின் காப்புரிமைEMPICS
அன்றைய தினம் காலையில் தனது பெற்றோர்களுக்கு நீரஜா சமையல் செய்து கொடுத்திருக்கிறார். பெற்றோர் வேலைக்குச் சென்ற பிறகு தம்பியுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு, சாப்பாடு கொடுத்திருக்கிறார். மதிய உணவுக்குப் பிறகு, வீட்டில் திரைச்சீலைபோட்டு பிரித்துள்ள பின்பகுதியில் தூங்குமாறு தம்பியை அனுப்பியிருக்கிறார். மாலையில் தம்பி கூப்பிட்ட போது நீரஜாவிடம் இருந்து பதில் வராததால், திரைச்சீலையை அகற்றி பார்த்திருக்கிறார். அப்போது மின்விசிறியில் துப்பாட்டாவால் நீரஜா தூக்கு போட்டு தொங்கியதைப் பார்த்திருக்கிறார்.
உஸ்கே ருச்சிதா - வயது : 18
இன்டர்மீடியேட் இரண்டாவது ஆண்டு - சிஇசி (வணிகவியல், பொருளாதாரம், சிவிக்ஸ்)
அரசுக் கல்லூரியில் பயின்ற இவரது தந்தை ஒரு விவசாயி
கிராமத்தில் ருச்சிதாவின் வீட்டை கண்டுபிடிப்பது கஷ்டமானதாக இல்லை. அவருடைய வீட்டுக்கு நாங்கள் சென்றபோது, அவருடைய தாயாரும், சகோதரர் மனைவியும், பாட்டியும் திருமண ஆல்பத்தில் இருந்து புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ``இது எங்கள் மகனின் திருமண ஆல்பம். ருச்சிதா நன்றாக இருக்கும் படங்கள் இதில் தான் உள்ளன'' என்று கூறிய ருச்சிதாவின் தாயார் மனம் உடைந்து அழுகிறார். அவருடைய தாத்தா பெக்கய்யாவும் வந்து அமர்ந்து கொண்டார். ருச்சிதா மிகவும் செல்லமானவன், குடும்பத்தில் எல்லோருக்கும், அருகில் எல்லோருக்கும் பிடித்தமானவன் என்று அவர் கூறினார். ``அவளுக்கு பார்வைக் குறைபாடு இருந்தது. அதனால் நாங்கள் நிறைய கவனித்துக் கொண்டோம். இன்டர்மீடியேட் கல்வியை முடித்துவிட்டு, பட்டப் படிப்பு முடித்துவிட்டால், வேலை கிடைக்கும் வாய்ப்பை நெருங்கிவிட்டதாக இருக்கும் என்று அவளுடைய தந்தை நினைத்திருந்தார். அதன் மூலம் பொருளாதார ரீதியில் அவள் சுதந்திரம் பெற்றுவிடுவாள் என நம்பினார்'' என்று கன்னத்தில் வடிந்த கண்ணீரை துடைத்தபடி கூறினார் தாத்தா.
ருச்சித்தா
தேர்வுகளில் தேறிவிடுவோம் என்ற நம்பிக்கையில் ருச்சிதா இருந்ததாக சந்திரய்யா தெரிவித்தார். ``தேர்வு முடிந்து வந்தபோது, எல்லாவற்றிலும் தேறிவிடுவேன் என்றும், கல்லூரிக்குச் செல்வதற்கு ஆயத்தமாக வேண்டும் என்றும் கூறினாள்'' என்று அவர் கூறினார்.
நாங்கள் அங்கே இருந்தபோது சில சிறிய குழந்தைகள் அங்கே வந்தனர். அவர்களுக்கு ஆறு முதல் எட்டு வயது வரை இருக்கும். ருச்சிதா தங்களுடைய தோழி என்று கூறிய அவர்கள், தங்களிடம் சொல்லாமல் ருச்சிதா எங்கே சென்றார் என தெரியவில்லை என்று குறிப்பிட்டனர். தேர்வு முடிவுகள் வெளியான நாளன்று வீட்டுக்கு வந்த ருச்சிதா, தன்னுடன் விளையாடும் நான்கு குழந்தைகளுக்கும் முத்தம் கொடுத்தாள் என்று அவளின் தாத்தா பெக்கய்யா கூறினார். ``அவளை நான் கடைசியாக அப்போது தான் பார்த்தேன்'' என்றார் அவர்.
தந்த்ரவேணி பிரசாந்த் - வயது : 18
இன்டர்மீடியேட் இரண்டாம் ஆண்டு - சிஇசி (வணிகவியல், பொருளாதாரம், சிவிக்ஸ்)
குடும்பம் விவசாயம் மற்றும் கால்நடைகளை சார்ந்து உள்ளது.
பிரசாந்த்தின் கிராமத்துக்கு நாங்கள் சென்ற போது பொழுது சாய்ந்துவிட்டது. கிராமத்தின் மையப் பகுதியில் இரங்கல் பேனர் ஒன்றை அவருடைய நண்பர்கள் வைத்திருந்தனர். அவர்கள் பிரசாந்த்தின் வீட்டுக்கு எங்களை அழைத்துச் சென்றனர். அவருடைய நண்பர்களில் ஒருவரான அனில், தன்னுடைய செல்போனை எடுத்து பிரசாந்த்தின் படத்தைக் காட்டினார். ``எங்கள் குழுவிலேயே நல்ல தோற்றம் உள்ளவன் அவன். எங்களுடன் சுற்றித் திரிவான். பெற்றோரை நாம் நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவன் சொல்வான்'' என்று அனில் தெரிவித்தார்.
தந்த்ரவேணி பிரசாந்த் கொமுரய்யா
ஒரே மகனின் இழப்பால் குடும்பம் மனம் உடைந்து காணப்பட்டது. ``என் மகன் அதிக புத்திசாலி கிடையாது. முதலாவது ஆண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு சிரமப்பட்டான். ஆனால் தேர்வுக்காக அவன் கடுமையாக உழைத்தான். ஒரு பட்டம் பெற வேண்டும் என்பதற்காக, இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி நிலையை பெற்றுவிட வேண்டும் என்று விரும்பினான்'' என்றார் அவருடைய தந்தை கொமுரய்யா.
கிராமத்துக் கோவில் திருவிழாவில் அன்றிரவு விருந்து. பிரசாந்த்தும் அவனுடைய நண்பர்களும் இரவில் கோவிலில் இருப்பார்கள் என்பதால், காலையில் பிரசாந்த்தைப் பார்க்கலாம் என குடும்பத்தினர் நினைத்திருந்தனர். இருந்தபோதிலும், இரவில் வெகுநேரம் கழித்து தனது நண்பனுக்கு பிரசாந்த் போன் செய்திருக்கிறான். ``இரண்டாவது ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெறாததால் விரக்தி அடைந்திருப்பதாக அவன் கூறினான். அவனை ஆறுதல் படுத்த முயற்சி செய்தேன். ஆனால் என்னை மன்னித்துவிடு என்று சொல்லிவிட்டு, போன் இணைப்பை துண்டித்துவிட்டான்'' என்று தெரிவித்தார் பிரசாந்த்தின் நண்பர் ஒருவர்.
மாணவர்களைக் கொன்றது யார்?
இடைநிலைக் கல்வி தேர்வு முடிவுகளுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 2015-ல் ஐந்து என்ற நிலையில் இருந்து, 2018ல் 23 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மதிப்பீடு செய்ததில் ஏற்பட்ட தவறுகள் குறித்த செய்தி, பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கு கோபத்தையும் ஏமாற்றத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
வாழ்வை முடித்துக் கொண்டவர்களில் சிலர், பத்தாம் வகுப்பில் 70%-க்கும் அதிகமான மதிப்பெண்கல் பெற்றவர்கள். இடைநிலைக் கல்வி முதலாவது ஆண்டில் தெலுங்கு மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெறாததால் மகள் அனாமிகாவை இழந்த தந்தை அருட்லா கணேஷ், விடைத்தாள் திருத்தியதில் தவறு நடந்திருக்கும் என சந்தேகிக்கிறார். தெலுங்கு பாடத்தில் பூஜ்யம் மதிப்பெண் பெற்ற நவ்யா என்பவர் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த போது அவருக்கு 99 மதிப்பெண்கள் கிடைத்ததா அவர் சுட்டிக்காட்டுகிறார்.
``இதுபோன்ற விஷயங்கள் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் பிள்ளையை இழந்துவிட்ட என்னைப் போன்ற பெற்றோர்களுக்கு அதில் இப்போது என்ன கிடைக்கப் போகிறது'' என்கிறார். இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக வெண்ணிலாவின் தந்தை கோபாலகிருஷ்ணா கூறுகிறார். ``தோல்வி அடைந்ததை என் மகளால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் வாழ்வின் விளிம்புக்கு அவளைத் தள்ளியது யார் என்ற கேள்விக்கு எனக்கு விடை தெரிந்தாக வேண்டும். என் மகளின் மரணத்துக்கு யார் பொறுப்பு என தெரிய வேண்டும்'' என்று அவர் கூறுகிறார்.
வெண்ணிலாவின் தந்தை டி. கோபாலகிருஷ்ணா.
தர்மா ராமின் தாயார் விஜயலட்சுமி, ``கர்ப்பமாக இருந்த போது நான் கஷ்டப்பட்டேன். இப்போது என் மகனை இழந்துவிட்டேன். மிகுந்த பாசத்துக்குரியவன் அவன். ஒரு விஷயத்தில் தோல்வி அடைந்துவிட்டோம் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று வேதனை தெரிவித்தார். ஒரு சமூகம் என்ற அளவில் ஒரு மாணவரிடம் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன என்று அவனுடைய நண்பன் அபிராம் கூறினான். ``நாங்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும்போது, நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று நம்பத் தொடங்குகிறோம். ஆனால் எதுவாக இருந்தாலும் நல்லதாகவே முடியும் என்று எங்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லை'' என்று அவர் குறிப்பிட்டார்.

அதிகாரிகளின் தவறுகள் பற்றிய புகார்கள்

போராட்டங்கள் மற்றும் 22 மாணவ, மாணவியரின் தற்கொலைகளைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப் பட்டுள்ளது. நீதிமன்றம் இதில் தலையிட்டு, தேர்வுத் தாள்களை மறு மதிப்பீடு செய்யுமாறு இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது. 9.74 லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில் 3.28 லட்சம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
அதாவது இன்டர்மீடியேட் முதலாவது ஆண்டில் 60.5% தேர்ச்சியும், இரண்டாவது ஆண்டில் 64.8% தேர்ச்சியும் பெற்றிருக்கிறார்கள். இருந்தபோதிலும் முந்தைய 2018 ஆம் ஆண்டில் முதலாவது ஆண்டில் 62.73%, இரண்டாவது ஆண்டில் 67.06% தேர்ச்சி அடைந்துள்ளனர். 2017 ஆம் ஆண்டில் முதலாவது ஆண்டு மாணவர்கள் 57.3%, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 67% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Capital punishment
ஏப்ரல் 18 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், மதிப்பீடு மற்றும் நடைமுறைகளில் குறைபாடுகள் இருந்ததாக மாணவர்களும் பெற்றோர்களும் புகார்கள் கூறினர். ஏப்ரல் 19 ஆம் தேதியில் இருந்து வேணுகோபால் ரெட்டி, இன்டர்மீடியேட் கல்வி வாரிய அலுவலகத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார். அவருடைய மகன் கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவில் படித்திருக்கிறார்.
``என் மகன் முதலாவது ஆண்டில் கணிதத்தில் 75 க்கு 75 மதிப்பெண்ணும், இயற்பியல் மற்றும் வேதியியலில் 60க்கு 60 மதிப்பெண்ணும் பெற்றிருக்கிறான். ஆனால் இந்த ஆண்டு கணிதத்தில் 1 மதிப்பெண்ணும், இயற்பியலில் பூஜ்யம் மதிப்பெண்ணும் பெற்றிருப்பதாகக் காட்டியுள்ளனர். இது எப்படி சாத்தியம்? என் மகன் மற்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்து கொண்டிருக்கிறான். ஆனால் இந்தத் தேர்வு முடிவுகளைப் பார்த்து மனம் சோர்வாகி இருக்கிறான். படிப்பதை நிறுத்திவிட்டான், சாப்பிடுவது கிடையாது, வீட்டை விட்டு வெளியில் செல்வதும் இல்லை. அவனுடைய மனநிலை குறித்து எனக்கு கவலையாக இருக்கிறது'' என்று கண்ணீரை துடைத்தபடி கூறுகிறார் வேணுகோபால் ரெட்டி.
மாணவர்கள்படத்தின் காப்புரிமைRAVEENDRAN
இதுபற்றி ஆய்வு நடத்திய முதல்வர், கூடுதல் கட்டணம் எதுவும் இல்லாமல் தேர்வுத் தாள்களை மறு-மதிப்பீடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
உயிரை மாய்த்துக் கொண்ட மாணவ, மாணவியரின் தேர்வுத் தாள்களை முன்னுரிமை அடிப்படையில் கல்வி வாரியம் திருத்தியுள்ளது. ``மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டது குறித்து வாரியம் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கும் நிலையில்,பெற்றோர்களுக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதை ஒப்புக் கொள்கிறது. இருந்தபோதிலும் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கும், தொழில்நுட்ப மற்றும் தேர்வு முடிவு தயாரிப்பு முறைகளில் ஏற்பட்ட தவறுகளுக்கும் தொடர்பு இல்லை'' என்று கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

தோல்வி என்பது அவமானமா?

அரசு உதவி பெறாத தனியார் ஜூனியர் கல்லூரிகளுக்கு எதிரான புகார்கள் பற்றி விசாரிக்க இன்டர்மீடியேட் கல்வி வாரியத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிட்டி ஒன்று, ``தனிப்பட்ட ஒருவர் தற்கொலை செய்து கொள்வது என்பது, தனிப்பட்ட, சமூக அளவிலான, தார்மிக அடிப்படையில் சோகமான நிகழ்வு. முழுமையான வாழ்வின் ஆரம்பத்தில் இளமையில் இருப்பவரின் இழப்பு அதிக சோகமானது. அது சமூகத்தின் பொருளாதார, சமூக மற்றும் தார்மிக கட்டமைப்பு குறித்து கேள்வி எழுப்பும் சோகம்'' என்று கூறியுள்ளது.
மாணவர்கள்
``இந்தப் பிரச்சனைக்கு நிர்வாகங்கள், பெற்றோர்கள் மற்றும் அதிகாரவர்க்கத்தினர் கடந்த காலங்களில் காரணமாக இருந்துள்ளனர் என்று கமிட்டி கருதுகிறது. நிர்வாகங்களின் வணிக நோக்கு, நடைமுறை சாத்தியமில்லாத வகையில் பெற்றோரின் எதிர்பார்ப்புகள், இடைநிலைக் கல்வி வாரியத்தின் மோசமான அமலாக்க நடைமுறை ஆகியவை இந்தப் பிரச்சனைக்கு சம அளவு காரணங்களாக உள்ளன'' என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
இந்த அறிக்கை 2001ஆம் ஆண்டு அரசுக்கும் இடைநிலைக் கல்வி வாரியத்துக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை கட்டுப்படுத்துவது, தொழில்முறை ஆலோசகர்களை நியமிப்பது, விளையாட்டுகளை கட்டாயமாக்குவது, வேலை வாய்ப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட பரிந்துரைகள் அதில் அளிக்கப்பட்டிருந்தன. இருந்தபோதிலும், அறிக்கையின் பரிந்துரைகள் அமல் செய்யப்படவில்லை.
மாணவர்கள்படத்தின் காப்புரிமைAFP
இதற்கிடையில், இப்போதைய கல்வி முறையானது மாணவர்களுக்கு மன ரீதியில் அழுத்தம் தருவதாக உள்ளது என்று உளவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
``தேர்வு என்ற நடைமுறையே அழுத்தம் தரக் கூடியதாக உள்ளது. மேலும், பிள்ளைகளிடம் மட்டுமின்றி குடும்பத்தினர் மற்றும் சமூகத்தில் உணர்வுப்பூர்வமாக அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கல்வி நிலையங்கள் மாணவர்கள் மீது அதிக அழுத்தம் ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு தனிப்பட்ட மாணவருக்கும் வெவ்வேறு திறன்கள் இருக்கும். தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது யதார்த்தமானது இல்லை. அவ்வப்போது மாணவர்களுக்கு கவுன்சலிங் நடத்த வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இதையும் தாண்டி என்ன இருக்கிறது என்று அவர்களுக்கு சொல்லப்பட வேண்டும்'' என்கிறார் உளவியல் ஆலோசகர் வாசுப்பிரத கார்த்திக்._____Reference | Copyrights_____

Copyrights of this Post (Article & Image) belong to : https://www.bbc.com/tamil/india-48868504

No comments

Powered by Blogger.