Header Ads

Ads Bar

அமேசான் காட்டுத்தீ: தப்பிச் சென்றிருக்குமா விலங்குகள்?

அமேசான் காட்டுத்தீ: தப்பிச் சென்றிருக்குமா விலங்குகள்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
உலகில் சுமார் மூன்று மில்லியன் தாவரங்களும், விலங்குகளும் அமேசான் காட்டை இருப்பிடமாக கொண்டுள்ளன. இது உலகில் உள்ள அனைத்து உயிரினங்களில் பத்தில் ஒரு மடங்கு இங்கு வாழ்வதாக நம்பப்படுகிறது.
2010ஆம் ஆண்டிற்கு பிறகு அமேசான் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட மோசமான காட்டுத்தீ சம்பவம் இதுதான்.
இந்த செய்தியை நாம் எழுதிக் கொண்டிருக்கும்போது பிரேசிலின் விண்வெளி முகமை, இந்த மழைக்காடுகளில் இதுவரை 85,000 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
எனவே, அமேசானை ஆதாரமாக கொண்டு வாழும் இந்த உயிரினங்களுக்கு என்ன ஆனது?
இதில் சில விலங்குகள் தப்பி சென்றிருக்கக்கூடும். சிறுத்தை போன்ற விலங்குகள் விரைவாக ஓடும் என்பதால் அவை இந்த நெருப்பில் இருந்து தப்பித்திருக்கக் கூடும். ஆனால், பிற விலங்குகள் இந்த தீயில் சிக்குண்டு இறந்திருக்கும்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உயிரியல் பேராசிரியராக இருக்கும் க்ளாடியோ சிலெரோ, தான் குறிப்பாக சிறிய உயிரினங்கள் குறித்து கவலைப்படுவதாக தெரிவித்தார். இந்த சூழலில் அவை தப்பித்திருக்க வாய்பேயில்லை என அவர் கவலை தெரிவிக்கிறார்.
"இந்த தீயில் நிலம், நீர் ஆகிய இரண்டிலும் வாழக்கூடிய விலங்குகள், ஊர்வன மற்றும் முதுகெலும்பு இல்லாத விலங்குகள் குறித்துதான் நாம் கவலைக் கொள்ள வேண்டும். அவை சிறிய தனித்துவமான ஒரு பகுதியில் வாழ்கின்றன. எனவே அந்த இருப்பிடம் தீக்கு இரையானால் அவை முற்றிலும் அழிந்து போகும்" என்கிறார் க்ளாடியோ.
அமேசான்படத்தின் காப்புரிமைAFP
"அவைகளின் குட்டிகளுக்கும் ஆபத்துதான். ஏனென்றால் அவைகளின் முட்டைகளை ஈரப்பதம் நிறைந்த இடத்தில் வைக்க வேண்டும் ஆனால் இந்த தீயில் அவை வெந்துவிடும்."
எனவே இந்த காட்டுத்தீயில் சில உயிரினங்கள் அடியோடி அழிந்துவிடும் என அச்சம் தெரிவிக்கிறார் க்ளாடியோ.
"அமேசானில் வாழக்கூடிய, ஸ்லோத் போன்ற சிறிய மற்றும் மெதுவான பாலூட்டிகள், காட்டுத்தீயைக் கண்டு பயந்து உயிரிழக்கூடும்" என்கிறார் பேராசிரியர் க்ளாடியோ.
"இதேபோன்ற அச்சுறுத்தலைதான் பறவை இனங்களும் சந்திக்கின்றன. பறவைகள் தனித்தனியாக பறந்து சென்றால் தப்பித்திருக்கக்கூடும். ஆனால் அந்த சூழலில் அவை தனது குஞ்சுகளையும், முட்டைகளையும் விட்டு பறக்க நேரும்."
இந்த தீயை முதலில் பார்த்தவர்களில் ஒருவரான அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான பால் ரோலி, அமேசானில் தான் ஜூலை மாதம் பணி செய்து கொண்டிருந்தபோது பற்றிய காட்டுத்தீ குறித்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அமேசான் காட்டுத்தீ: தப்பிச் சென்றிருக்குமா விலங்குகள்?படத்தின் காப்புரிமைREUTERS
மேலும், "இந்த விலங்குகள், பறவைகள் எல்லாம் உயிருடன் தீயில் வெந்து கொண்டிருக்கின்றன என்பதை மனிதர்கள் உணரவே இல்லை" என பிபிசியிடம் தெரிவித்தார் அவர்.
"கூட்டில் உள்ள பறவை குஞ்சுகள், பாம்புகள், தவளைகள் இந்த தீயில் இருந்து தப்பித்து ஓட முயற்சிக்கின்றன. ஆனால் அவைகளுக்கு இதுதான் ஒரே இருப்பிடம்."

’உபயோகமற்ற நிலம்’

ஒரு பகுதி தீக்கு இரையானால் அது பல உயிரினங்களுக்கு உபயோகமற்ற இடமாக மாறிவிடும்.
"ஏற்கனவே உள்ள பகுதிகளில் முழுவதும் விலங்குகள் இருக்கும்போது தப்பிச் செல்லும் உயிரினங்கள் தங்கள் இனத்தை சேர்ந்த விலங்குகளையே இடம்மாற்ற நேரிடும். அல்லது ஒரு புதிய இடம் உருவாகும் வரை அவை காத்திருக்க வேண்டும். ஆனால் பழைய இடங்கள் தீயில் கருகிவிட்டதால் நிச்சயமாக அங்கு மீண்டும் சென்று வாழ இயலாது." என்கிறார். மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அலெக்ஸ் லீஸ்.
அமேசான் மழைக்காடுகள் போன்ற பகுதியில் சில பகுதிகளில் உள்ள மரங்கள் எரிந்துவிட்டால், அந்த பகுதி காலியாகிவிடும். எனவே அந்த பகுதியில் மரத்தில் நிழல் இல்லாததால் அதிகப்படியான சூரிய ஒளி வரும் அந்த நிலப்பகுதி காய்ந்துவிடும். இதனால் அங்கு காய்ந்த நிலத்தில் வாழக்கூடிய உயிரினங்கள் வரக்கூடும். ஆனால் காட்டின் ஈரத்தன்மையை நம்பி வாழும் உயிரனங்களுக்கு அந்த இடம் இல்லாமல் போகும்.
பறவைகள் பாதுகாப்பு நிபுணரான லீஸ், இதற்கு எடுத்துக்காட்டாக பூச்சிகளை தின்னும் பறவைகளை சுட்டிக்காட்டுகிறார்.
அமேசான் காட்டுத்தீ: தப்பிச் சென்றிருக்குமா விலங்குகள்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
ரகசியமாக யாருக்கும் தெரியாமல் உணவை வேட்டையாடும் அந்த பறவைக்கு நிலப்பகுதி மெருதுவாகவும், ஈரப்பசையுடனும் இருக்க வேண்டும். காய்ந்த இலைகள் இருந்தால் இது சாத்தியமில்லாமல் போகக் கூடும்.

'நீண்டகாலத்துக்கான அழிவு'

இந்த காட்டுத்தீயானது, பறவைகள், பூச்சிகள் அல்லது நிலத்தில் வாழும் பாலூட்டிகளை மட்டும் அழிக்கவில்லை. இது நீரில் வாழக்கூடிய உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் நதியில் வாழக்கூடிய டால்ஃபின்கள் அல்லது பலவகையான மீன்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த உயிரினங்கள் நீரில் ஒளிந்து கொண்டு தீயில் இருந்து முதலில் தப்பித்தாலும் அது வாழக்கூடிய நதியும், எரியும் இந்த தீயால் நிச்சயம் மாறுப்பட்டிருக்கும் என்கிறார் சஃபோல்க் பல்கலைக்கழகத்தின் சூழலியல் நிபுணர் மார்க் பவுலர்.
அமேசான் காட்டுத்தீ: தப்பிச் சென்றிருக்குமா விலங்குகள்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
கால்நடைகளை வளர்க்க வேண்டும் என காட்டின் ஒரு பகுதியை எரித்தால் அது நீரை பாதிக்கும் என்கிறார் அவர். மேலும், மீன்கள் எண்ணிக்கையும், நதியின் சூழலியலும் மாறும்போது அது பெரியவகை டால்பின்களை போன்ற உயிரனங்களை பாதிக்கும் என்கிறார் மார்க்.
இந்தக் காட்டை நம்பி வாழ்கின்ற மனிதர்களும் தங்கள் வாழ்வாதாரங்களை இந்த காட்டுத்தீயினால் இழக்கக்கூடும்.
அமேசானின் பழங்குடி மக்களுடன் இணைந்து பணிபுரியும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிஞரான ரேசல் கார்மெண்டா, இது மனிதர்களுக்குமான பிரச்சனையும் கூட என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இந்த காட்டிற்கு சென்று மிச்சமுள்ள மிருகங்களை வேட்டையாடுவதும் கூட இவர்களுக்கு தற்போது சாத்தியமில்லை. இவர்கள் ஏற்கனவே வைத்திருந்த ஆமை போன்ற விலங்குகளும் தீயில் அழிந்திருக்கக்கூடும் என்கிறார் அவர்.
அமேசான் காட்டுத்தீ: தப்பிச் சென்றிருக்குமா விலங்குகள்?படத்தின் காப்புரிமைJOAO LAET/AFP/GETTY IMAGES
மேலும் அவர்கள் வீடுகட்ட பயன்படுத்தப்படும் மரங்களும், பயன்படுத்தும் மூலிகைச் செடிகளும் கூட அழிந்திருக்கும் என்கிறார் அவர்.
"இந்த தீயில் அழிந்து போன செடிகளும், உயிரினங்களும் ஒருபுறம் இருக்க, இந்த பழங்குடி மக்கள் இந்த நிலத்தின் மீதும், அவர்கள் கட்டிய வீடுகள் மீதும் வைத்திருந்த உறவு, பாசம் என அனைத்தும் அழிந்து போய்விட்டன. அது தீயில் எந்த அடையாளமும் இல்லாமல் சென்றுவிட்டன" என்கிறார் கார்மெண்டா.
மேலும் பலர் இதனால் பட்டினியால் உயிரிழக்கவும் நேரிடலாம் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

No comments

Powered by Blogger.