Header Ads

Ads Bar

ஆசிரியர் தினம்: 'கல்வியை வியாபாரமாக்கும் நிறுவனங்கள் குழந்தைகளுக்கு என்ன சொல்லித்தர முடியும்?'

ஜோதிகா - கொளதம்ராஜ்
கெளதம்ராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ராட்சசி திரைப்படம் பரவலான கவனத்தைப் பெற்றிருந்தது மட்டுமல்லாமல் கல்வி நிறுவனங்களின் செயல்பாடு குறித்த விவாதத்தையும் பொது வெளியில் உண்டாக்கி இருந்தது.
செப்டம்பர் 5 - ஆசிரியர் தினத்திற்காக பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தன்னை ஊக்குவித்த ஆசிரியர்களை நினைவுகூர்ந்த கெளதம்ராஜ் படத்தில் வைக்கப்பட்ட ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு அனுபவம் காரணமாக அமைந்தது என்கிறார். பேட்டியிலிருந்து:
ராட்சசி படத்தில் கீதா ராணி என்ற கதாபாத்திரம் போன்ற ஆசிரியரை நீங்கள் சந்தித்தீர்களா? அந்த கதாபாத்திரம் எப்படி கட்டமைக்கப்பட்டது?
நான் சந்தித்த நல்லுள்ளம் கொண்ட பல ஆசிரியர்களின் தொகுப்புதான் கீதா ராணி என்ற கதாபாத்திரம். குறிப்பாக நான் அறந்தாங்கி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது, தலைமையாசிரியர் சின்னையா எல்லா மாணவர்களும் தேர்ச்சி பெறவேண்டும் என கடுமையாக உழைத்தார். ஒன்பதாம் வகுப்பில் ஒரு மாணவன் தேர்ச்சி அடையாமல் போனால், அவனுடைய எதிர்காலம் மோசமாக அமைந்துவிடும்.
பத்தாம் வகுப்பிற்குள் நுழைவதற்கு முன்பே, எந்தெந்த மாணவர்களுக்கு சிறப்பு கவனம் தேவை என வகைப்படுத்தி, தனியாக வகுப்புகள் எடுக்க ஏற்பாடு செய்தார். அதுநாள்வரை ஐந்து பாடங்களிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அவர் அளித்த கவனத்தால், பொதுத்தேர்வில் 11 மாணவர்கள் 500 மதிப்பெண்ணுக்கு 400க்கும் மேலே எடுத்து தேர்ச்சிபெற்றார்கள். இது என்மனதில் பதிந்த சம்பவம்.
ஆசிரியர் தினம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
சின்னையா ஆசிரியரின் தாக்கத்தால், ஆரோக்கியமானவர்களுக்கு டாக்டர் எதற்கு, படிக்காத மானவர்களுக்குத்தான் ஆசிரியர்களின் உதவி தேவை என்பதை விளக்கும் காட்சியை படத்தில் வைத்தேன்.
அதேபோல, சேதுராமன் என்ற மற்றொரு ஆசிரியர். என் வகுப்புக்கு வராத ஆசிரியராக இருந்தாலும், பேச்சு போட்டியில் நான் பேசுவதைப் பார்த்துவிட்டு, எனக்கு மேலும் வாய்ப்புகள் கிடைக்க உதவினார். பள்ளிவிழாக்களில் குழு தலைமை பொறுப்புகளை எனக்கு கொடுத்தார். இதுபோல பல ஆசிரியர்கள் நான் வளர்வதற்கு உதவினார்கள். அவர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்.
தனியார் பள்ளி நிறுவனர் ஒருவர் அரசு பள்ளியில் உள்ள மாணவர்களை தன் பள்ளியில் சேர்த்துவிடவேண்டும் என அரசுப் பள்ளியில் உள்ளவர்களுக்கு கமிஷன் கொடுப்பது போன்ற காட்சி மற்றும், அரசு பள்ளியில் சேர்க்கை குறையாமல் இருக்க போராடும் அரசு ஆசிரியராக கீதா ராணி இருக்கிறார் என்ற காட்சியையும் அமைத்துள்ளீர்கள். இதுபோன்ற நிகழ்வு எதுவும் நடந்துள்ளதா?
அரசால் பள்ளி தொடங்கமுடியாத இடங்களில், செல்வந்தர்கள் அறக்கட்டளை மூலம் பள்ளிகளை தொடங்கட்டும் என காமராஜர் காலத்தில் கொண்டுவரப்பட்ட விதிகளால் தமிழகத்தில் பல பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்த காலத்தில்தான் பெருமளவு உயர்ந்தது. ஆனால் 1992 முதல் உலகமயமாக்கல் காரணமாக, தனியார் பள்ளிகள் வீரியமாக வளர்ந்தன. கல்வி ஒரு வியாபாரமாக மாறி, வசதிக்கு ஏற்றவாறு பணம் கட்டும் இடமாக பள்ளிக்கூடங்கள் மாறிவிட்டன.
அரசு பள்ளியில் வேலைசெய்த சில ஆசிரியர்கள் ஒன்றுசேர்ந்து தனியார் பள்ளிகளை தொடங்கி, அரசு பள்ளிகளில் நன்றாக பயிலும் மாணவர்களை தங்களது பள்ளியில் சேர்த்து, தனியார் பள்ளியில் சிறந்த கல்வி கொடுக்கப்படுகிறது என்ற மாயையை உருவாக்கினார்கள். அரசுப்பள்ளிக்கு எதிரான மனப்போக்கை உருவாக்கினார்கள். காலப்போக்கில், அரசு பள்ளி என்பது வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு என்ற நிலையை ஏற்படுத்திவிட்டார்கள்.
அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு அரசாங்கம் முதலாளி என்ற சிந்தனை உள்ளது. உண்மையான முதலாளி அந்த பள்ளிக்கு வரும் மாணவர்கள்தான். மாணவர்கள் குறையும்போது, அந்த பள்ளி மூடப்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களைத் தக்கவைக்க, அவர்களை முன்னேற்ற ஆசிரியர்கள் உழைக்கவேண்டும் என்பதை படத்தில் விளக்கியுள்ளேன்.
ஆசிரியர்
கீதா ராணியை போல அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறையக்கூடாது என போராடிய ஆசிரியர்களை நேரடியாக சந்திக்கவில்லை. ஆனால் ஆசிரியர்கள் இதுபோல செயல்பட்டால் பல அரசுப்பள்ளிக்கூடங்கள் உயிர்பெறும் என்ற எண்ணம்தான் அந்த காட்சியை உருவாக்க வைத்தது.
தனியார் பள்ளிகள் அரசாங்கத்தின் விதிகளின்படி தொடங்கப்பட்டுள்ளன. கல்வி வழங்குவதற்காக அவர்கள் கட்டணம் விதிக்கிறார்கள். அரசு பள்ளிகளை மூடவேண்டும் என தனியார் நிறுவனங்கள் மறைமுகமாக நெருக்கடி கொடுக்கின்றன என எவ்வாறு சொல்கிறீர்கள்?
தனியார் பள்ளிகளுக்கு நோக்கமே கல்வியை மூலதனமாக வைத்து காசு சம்பாதிப்பதுதான். அரசு சொல்லும் கட்டண விதிகளைக்கூட பல தனியார் பள்ளிகள் பின்பற்றுவதில்லை.
அரசு பள்ளியில் கல்வி இலவசம். ஆனால், தனியார் பள்ளியில் தரமான கல்வி என்ற பெயரில், எல்லா விதத்திலும் காசு வசூலிக்கிறார்கள். நம் குழந்தைகள் ஏன் டை கட்டவேண்டும், ஷூ போடவேண்டும், அடிக்கடி ஏன் சீருடை புதிய வண்ணத்தில் மாற்றப்படுகிறது? வசூல்வேட்டை நடத்தும் இடமாக தனியார் கல்விக்கூடங்கள் செயல்படுகின்றன.
அரசுப் பள்ளி
இதன்பின்னணியில் அரசு பள்ளிகள் தரத்தில் குறைந்தவை என்ற போலியான தோற்றத்தை ஏற்படுத்தி, தனியார் பள்ளிகள்தான் சிறந்தவை என்ற சிந்தனையை சமூகத்தில் ஏற்படுத்திவிட்டார்கள். தொடர்ச்சியான இந்த வேலையால் மாணவர்கள் சேர்க்கை அரசுப்பள்ளிகளில் குறைந்துவிட்டது. அரசுப் பள்ளிகளிலும் கட்டுமான பிரச்சனைகள் உள்ளன. ஆனால் அவை தீர்க்கப்படகூடியவை. ஆனால் கல்வியை வியாபாரமாக பார்க்கும் இந்த நிறுவனங்கள் நம் குழந்தைகளுக்கு என்ன சொல்லித்தரமுடியும். ஒவ்வொரு மாணவனையும் பணம் கொடுக்கும் வாடிக்கையாளராகத்தானே தனியார் பள்ளிகள் பார்க்கிறார்கள்.
தற்போது அருகாமையில் உள்ள அரசு பள்ளிகளை இணைத்து ஒரு பள்ளியாக மாற்றும் வேலைகள் நடக்கின்றன. நம் கண் முன்னே அரசுப்பள்ளிகள் அழிகின்றன என்பதற்கு இவையெல்லாம் சாட்சிகள்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது தகுதியை உயர்திக்கொள்வதில்லை, அரசு ஆசிரியர்கள் முறையாக வேலைசெய்வதில்லை என்ற தோற்றத்தை உங்கள் படம் ஏற்படுத்தியுள்ளது என்றும் விதிவிலக்காக இருப்பவர்களை வைத்துக்கொண்டு எல்லா ஆசிரியர்களையும் தவறாக சித்தரித்துள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் வைத்துள்ள விமர்சனம் குறித்து உங்கள் கருத்து?
ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டி. அதில் எந்த ஆசிரியரும் விதிவிலக்காக செயல்படக்கூடாது. விதிவிலக்கான ஆசிரியர் ஒருவரின் பணிக்காலத்தில் சுமார் 1,000 மாணவர்களுக்கு சொல்லித்தருவதாக இருத்தால், அந்த 1,000 மாணவர்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? எந்த ஒரு ஆசிரியரும் தகுதியில்லாதவர்களாக இருக்கக்கூடாது. பின்லாந்து போன்ற நாடுகளில் ஆசிரியராக தேர்வாக வேண்டும் எனில் கடுமையான போட்டிகளை சந்திக்கவேண்டும். நம் நாட்டில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ஒப்பானது அந்த தகுதித் தேர்வு.
நம் நாட்டில் பலர் ஆசிரியராக தேர்வான பின்னர், தங்களது திறனை வளர்த்துக்கொள்வதை நிறுத்திவிடுகிறார்கள். ஒவ்வொரு மாணவனிடம் ஆசிரியர் ஏற்படுத்தும் தாக்கம்தான இந்த நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடப்போகிறது. வாசிப்பு மிகுந்த சமூகமாக நாம் இருந்தால் மட்டுமே, நாம் முன்னேறுவோம். குறைந்தபட்சம் நாட்டை யார் ஆளவேண்டும் என்றபுரிந்துகொண்டு ஓட்டுப்போடுவதற்கு நமக்கு தெளிவு பிறக்கும்.
நீட் தேர்வு
ரஷ்யாவில் புரட்சியை ஏற்பட முக்கிய காரணியாக மார்க்ஸ் எழுதிய புத்தகம் அமைந்தது. ரூசோ எழுதிய புத்தகம் பிரான்சில் புரட்சியை கொண்டுவந்தது. ஏன், ஹிட்லரின் மெயின் கேம்ப் புத்தகம் ஜெர்மனி மக்களின் சிந்தனையை மாற்றியது. அவர் மீது விமர்சனம் இருந்தாலும், புத்தகம் ஏற்படுத்தும் தாக்கம் என்பதற்காக எடுத்துக்காட்டாக சொல்கிறேன்.
வாசிக்கும் சமூகம் ஆற்றல்மிக்க சமூகமாக இருக்கும், புத்தகம் வாசிக்கும் ஆசிரியர் ஆற்றல் மிக்கவராக இருந்தால்தான் திறமையான சமூகத்தை உருவாக்கமுடியும். மதிப்பெண்களை பெற்று சம்பளம் வாங்க ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர ஒருவனை தயார் செய்வது போதுமானது அல்ல. இந்த சமூகம் பயன்பெறும் வகையில் ஒருவனை உருவாக்கும் பணியில் இருப்பவர்கள் ஆசியர்கள் என்பதால், அவர்கள் புதிய சிந்தனை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதை படத்தில் உணர்த்தியுள்ளேன்.
எத்தனை ஆசிரியர்கள் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக்கொள்கை பற்றி தெளிவான பார்வையை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அந்த கல்வி கொள்கை அவர்களுக்கு எதிரானது என புரிந்துகொள்வது கூட பல ஆசிரியர்களுக்கு சிரமமாக உள்ளது. வாசிக்கும் பழக்கம் ஆசிரியர்களிடம் மிகவும் குறைவாக உள்ளது.
சாதிக் கயிறு கட்டும் பழக்கம் இருப்பதை பற்றியும், தீண்டாமை பிரச்சனையை ஆசிரியர்கள் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என படத்தில் காட்டியுள்ளீர்கள். அந்த பள்ளிகள் பற்றி விரிவாக சொல்லமுடியுமா?
தமிழகத்தில் கடலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி போன்ற ஊர்களில் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் தங்களது அடையாளத்தை குழந்தைகளிடம் திணிக்கிறார்கள். ஆதிக்க சாதி கட்சிகளை சேர்ந்தவர்கள் பள்ளிமாணவர்கள் தங்கள் சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வண்ணக் கயிறுகளை கட்டி செல்வதை ஊக்குவிக்கிறார்கள். படம் வெளியான சிலநாட்களில் பயிற்சி ஐஏஎஸ், ஐபிஎஸ் மாணவர்கள் சாதிக் கயிறு கட்டும் பழக்கம் நிறுத்தப்படவேண்டும் என கல்வித்துறையில் தெரிவித்தார்கள்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜா கயிறு கட்டுவது மத அடையாளம் என்றார். ஆனால் சாதிக் கயிறு கட்டுவது மத அடையாளம் கிடையாது, சாதியை காட்டுவதற்காக கட்டும் கயிறை பள்ளிக்குள் அனுமதிக்கக்கூடாது. விதிமுறையை பின்பற்றுகிறோம் என்ற பெயரில், நீட் தேர்வுக்கு செல்லும் பலரின் கைகளில் இருந்த கயிறு, கழுத்தில் அணிந்திருந்தது ஆகியவற்றைக் கழற்றி வைக்கவேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இதுபோன்ற நிகழ்வுகள்தான் மத அடையாளத்திற்கு எதிரானது. இதனை அவர் எதிர்த்திருக்கலாம். ஆனால் சாதி கட்டுமானத்தை வலுப்படுத்தும் சாதிக் கயிறுகளை கட்டும் பழக்கம் ஒழிக்கப்படவேண்டும்.
ராட்சசி படத்தை மாணவர்களும் ஆசிரியர்களும் பார்க்க வேண்டும் என மலேசிய கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார். மாலிக் உங்களிடம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. என்ன நடந்தது?
மலேசிய கல்வி அமைச்சர் உள்ளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். மலேசியாவில் கல்விக்கூடங்களில் மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளதாகவும், அதற்கு இந்த படத்தில் உள்ள கருத்துகள் மிகவும் பொருந்தும் என்றும் கூறினார். நேரில் சந்திக்க அழைப்புவிடுத்துள்ளார்.
DR MASZLEE MALIKபடத்தின் காப்புரிமை@DRMASZLEEMALIK/FACEBOOK
நான் சந்தித்த ஆசிரியர்கள் பற்றி விரிவாகப் பேசவேண்டும் என தகவல் ஒன்றையும் அனுப்பியுள்ளார். பல காட்சிகளைக் குறிப்பிட்டு பேசினார்.
மலேசிய கல்வி அமைச்சகத்தின் அலுவலர் ஒருவரும் வாழ்த்தினார். மகிழ்ச்சியாக உள்ளது. படம் வெளியானதில் இருந்து, பல ஆசிரியர்களின் வாழ்த்துகளைப் பெற்றுவருகிறேன். தமிழகத்தைச் சேர்ந்த பல ஆசிரியர்கள் படத்தில் உள்ளதுபோன்ற சூழலை எவ்வாறு கையாண்டார்கள் என மனம் விட்டுப் பேசினார்கள்.
உண்மையாக வேலைசெய்பவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது இந்த படம். அதேநேரம் வேலைசெய்யாதவர்கள், புரிந்துகொண்டு தங்களை சரிப்படுத்திக்கொள்வார்கள் என நம்புகிறேன்.

No comments

Powered by Blogger.