Header Ads

Ads Bar

சௌதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல்: படைகளை அனுப்புகிறது அமெரிக்கா

இரான் ராணுவத்தின் தளபதி மேஜர் ஜென்ரல் ஹுசேன் சலாமிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
சௌதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில், செப்டம்பர் 14 அன்று நடத்தப்பட்ட தாக்குதல் சௌதி பாதுகாப்பு அமைப்புகளின் குறைகளை வெளிக்காட்டியுள்ள நிலையில், அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள இரான் புரட்சிக்கர படை என்று அழைக்கப்படும் இரான் ராணுவத்தின் தளபதி மேஜர் ஜென்ரல் ஹுசேன் சலாமி, "எச்சரிக்கையாக இருங்கள், எந்தத் தவறும் செய்யாதீர்கள்," என்று அமெரிக்கா மற்றும் சௌதி அரேபிய அரசுகளுக்கு கூறியுள்ளார்.
தலைநகர் டெஹ்ரானில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இரான் எல்லையை யார் கடந்தாலும் அவர்களை தாக்குவோம்," என்று கூறியுள்ளார்.
இரான் புரட்சிகர ராணுவம் அமெரிக்காவில் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Saudi Arabia oil attacksபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஅமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர் (இடது) மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜோசஃப் டன்ஃபோர்டு
சௌதியில் நடந்த ஆளில்லா விமான (டிரோன்) தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டுக்கு தங்களின் படைகள் அனுப்பப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தப் படைகள் தாக்குவதற்காக அல்லாமல் பாதுகாக்கும் நோக்கத்துடனேயே அனுப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார். எனினும், எத்தனை பேர் அடங்கிய படை என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
சௌதியின் வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தாக்குதல் தடுப்பு அமைப்புகளை பலப்படுத்தும் நோக்கத்துடனேயே இந்தப் படைகள் அனுப்பப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியான ஸ்டாஃப் ஜென்ரல் ஜோசஃப் டன்ஃபோர்டு அங்கு அனுப்பப்படும் படை வீரர்களின் எண்ணிக்கை மிதமாகவே இருக்கும் என்றும், அது ஆயிரங்களைத் தொடாது என்றும் கூறியுள்ளார்.
அவர்கள் எதில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று அவர் கூறவில்லை.
சௌதி அரேபியா எண்ணெய் வயல் தாக்குதல்படத்தின் காப்புரிமைREUTERS

தாக்குதலின் பின்னணியில் இரான் என குற்றச்சாட்டு

இந்தத் தாக்குதலின் பின்னணியில் இரான் இருப்பதாக சௌதி அரேபியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சாட்டின.
இரானின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும், பாரசீக வளைகுடாவின் வடக்கு முனையிலிருந்தே இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு கூறியது.
இரானின் மத்திய வங்கி மற்றும் அதன் நிதிகளை முடக்கும் நோக்கில் பொருளாதாரத் தடைகள் விதிப்பதாக வெள்ளியன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது அனுப்பப்படும் படைகள் இரான் மீது தாக்குதல் நடத்துமா என்று பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, "நாங்கள் இப்போது அந்த நிலையில் இல்லை," என்று மார்க் எஸ்பர் கூறினார்.
இந்த தாக்குதலில் தங்களின் பங்கு எதுவுமில்லை என்று மறுத்த இரான், எந்தவித ராணுவ நடவடிக்கையையும் சமாளிக்க தாங்கள் எதிர்தாக்குதல் நடத்த தயார் என இந்த வாரம் எச்சரித்தது.

எங்கு தாக்குதல் நடந்தது?

அப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றில் தாக்குதல் நடந்தது.
அப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்படத்தின் காப்புரிமைAFP
Image captionதாக்குதலுக்கு உள்ளான வளாகங்கள் இந்த மாத இறுதிக்குள் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படலாம் என சௌதி அரசு நம்புகிறது.
இரான் ஆதரவளிக்கும், ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தனர்.
சௌதி விமானப் படை மற்றும் சௌதி தலைமையிலான கூட்டுப்படை சமீப ஆண்டுகளாக ஏமனில் ஹூதி கிளிர்ச்சியாளர்களுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
2015இல் இருந்து போர் நடந்து வரும் ஏமனில் அதிபர் அப்த்ராப் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சௌதி அரசு உள்ளது.

தாக்கப்பட்ட இடங்களின் முக்கியத்துவம்

அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உலகின் பயன்பாட்டுக்கு தேவையான 7% பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியை சுத்திகரிக்கும் வசதி உள்ளது. குராய்ஸ் எண்ணெய் வயலில்தான் உலக அளவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 1% கிடைக்கிறது.
தாக்குதல்கள் சௌதி அரேபியாவின் ஆதரவைப் பெற்றுள்ள ஏமன் அரசுக்கு எதிராகப் போரிடும் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தந்திரோபாய அச்சுறுத்தலை வெளிக்காட்டும் வகையில் இது அமைந்துள்ளது.
செளதி அரேபிய எண்ணெய் ஆலையில் தாக்குதல்
உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாக அரம்கோ இருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
2006இல் அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அல்-கய்தா நடத்தத் திட்டமிட்ட தற்கொலைத் தாக்குதலை சௌதி காவல் படைகள் முறியடித்திருந்தன.
ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தும் அளவுக்கு வல்லமை பெற்றிருந்தால், அந்த அளவுக்கான வசதிகள் அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கின்றன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

No comments

Powered by Blogger.