Header Ads

Ads Bar

இந்தியா - சௌதி அரேபியா உறவுகள்: எரிசக்தி தேவையைக் கடந்த பந்தம்

இந்தியா - சௌதி அரேபியாபடத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES / GETTY IMAGES
கடந்த சில ஆண்டுகளில் வளைகுடா பகுதியில் மிகப் பெரிய நாட்டுடன் இந்தியாவுக்கு பலமான உறவு ஏற்பட்டுள்ளதை வெளிக்காட்டும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இந்த வாரம் சௌதி அரேபியா பயணம் மேற்கொண்டிருந்தார்.
மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அவர் சௌதி பயணம் மேற்கொண்டார். 2016ல் முதன்முறையாக அவர் சௌதி சென்றபோது, மன்னர் சல்மான், சௌதி அரேபியாவின் மிக உயரிய விருதை அவருக்கு வழங்கினார்.
இரண்டாவது பயணத்தின்போது, எதிர்கால முதலீட்டுக்கான உச்சிமாநாடு ஒன்றில் அவர் கலந்து கொண்டார். பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஏற்பாடு செய்திருந்த அந்த மாநாடு ''பாலைவனத்தில் ஒரு டாவோஸ்'' என குறிப்பிடப்பட்டது. (சுவிட்சர்லாட்த்தில் உள்ள டாவோஸில் ஆண்டுதோறும் வோர்ல்டு எகனாமிக் ஃபோரம் (World Economic Forum) எனப்படும் உலகப் பொருளாதார மாநாடு நடக்கும்.)
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் இளவரசர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்த சூழ்நிலை, அதை சர்வதேசப் பிரச்சனையாக ஆக்க பாகிஸ்தான் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பின்னணியில் சௌதி தலைநகர் ரியாத்துக்கு நரேந்திர மோதி மேற்கொண்டிருந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.
இந்தியாவில் எரிசக்தித் துறையில் முதலீடு செய்ய சௌதி அரேபியா முன்வர வேண்டும் என்று மோதி அழைப்பு விடுத்தார். 2024ஆம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இந்தியா சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7,000 கோடி) முதலீடு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தியா - சௌதி அரேபியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஐந்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு இரட்டிப்பாக வேண்டும் என்ற நோக்கத்தில், எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கூடுதல் சுத்திகரிப்பு திறன் உருவாக்குதல், புதிய குழாய்கள் அமைத்தல், எரிவாயு இறக்குமதி முனையங்களை கட்டமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக பிரதமர் விவரித்தார்.
"அரசியல் ஸ்திரத்தன்மை, முதலீட்டாளர்கள் ஊகிக்கக் கூடிய கொள்கை, பரந்து விரிந்த சந்தை வாய்ப்பு ஆகியவை இருப்பதால் இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும்,'' என்று முதலீட்டாளர்களுக்கு அவர் உத்தரவாதம் அளித்தார்.
அடுத்த சில ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு செலவு செய்ய இந்தியா உத்தேசிருப்பதாக அவர் கூறினார். எண்ணெய் மற்றும் எரிவாயு தவிர, சாலைகள், விமான நிலையங்கள், துறைமுக திட்டங்களும் இதில் அடங்கும் என குறிப்பிட்டார்.
மகாராஷ்டிராவில் வெஸ்ட் கோஸ்ட் திட்டத்தில் ஆண்டுக்கு 60 மில்லியன் டன் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்திக்கு சௌதி அரசுக்குச் சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனம் முதலீடு செய்திருப்பதை அவர் குறிப்பிட்டார். ஆசியாவில் மிகப் பெரிய சுத்திகரிப்பு நிலையமாக அது அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சௌதி அரேபியாவுடன் இந்தியாவின் வர்த்தக உறவு பலமடைந்து வருகிறது. எரிபொருள் வர்த்தகம் முக்கியமானதாக இருந்தாலும் வாங்குபவர் - விற்பவர் என்ற நிலை மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையில் நீடிக்கவில்லை.
இராக்கிற்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு அதிக எரிபொருள் வழங்கும் நாடாக சௌதி அரேபியா உள்ளது. இந்தியாவின் நான்காவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சௌதி அரேபியா உள்ளது.
2017-18ல் இரு தரப்பு வர்த்தகம் 27.48 பில்லியன் டாலராக இருந்தது. இப்போது எரிசக்தி, சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல்கள், மற்றும் வேளாண்மை, தாதுக்கள் மற்றும் சுரங்கத் துறைகளில் கட்டமைப்புகளில் 100 பில்லியன் டாலர்கள் வரையில் சௌதி முதலீடு செய்யவுள்ளது.
நரேந்திர மோதிபடத்தின் காப்புரிமைTOSHIFUMI KITAMURA / GETTY
இது உண்மையிலேயே முக்கியத்துவமான உறவாக அமைந்துள்ளது என்று ரியாத்தில் மோதி குறிப்பிட்டார். மோதியின் பயணத்தின் போது இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இந்திய முக்கிய பெட்ரோலிய சேமிப்பு நிறுவனத்துக்கும் சௌதி அரம்கோ நிறுவனத்துக்கும் இடையிலான முதலாவது ஒப்பந்தத்தின்படி, கர்நாடகாவில் இரண்டாவது எரிபொருள் சேமிப்பு வசதியை ஏற்படுத்துவதில் சௌதி பெரும்பங்கு வகிக்கும்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மேற்கு ஆசியா பிரிவுக்கும், சௌதி அரேபியாவின் அல் ஜெரி நிறுவனத்துக்கும் இடையில் துறை சார்ந்த ஒத்துழைப்பு குறித்து இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது.
"இந்தியா தனது எதிர்பார்ப்புகள், உயர் விருப்பங்களை அடைவதற்கு உதவும் வகையில்,'' இந்தியா - சௌதி முக்கிய பங்களிப்பு கவுன்சில் அமைக்கப்படுவதாக மோதி அறிவித்தார். இரு நாடுகளும் மாறி, மாறி இந்த அமைப்புக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்கும்.
சௌதி அரேபியாவில் வாழும் வெளிநாட்டவர்களில் இந்திய மக்கள் அதிகமாக உள்ளனர். அங்கு 26 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். கடந்த காலத்தைப் போல அல்லாமல், இருதரப்பு ஈடுபாடுகளை வளர்ப்பதில் அங்குள்ள இந்தியர்களை ஈடுபடுத்தாமல் விட்டுவிடுவதில்லை.
சௌதி அரேபியாவில் உள்ள இந்திய மக்களின் "கடின உழைப்பும், கடமை உணர்வும்'' இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்தியுள்ளது என்று மோதி சுட்டிக்காட்டினார்.
"சௌதியில் உங்களுக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டிருப்பது குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. உங்கள் கடின உழைப்பும், கடமை உணர்வும் ஒட்டுமொத்த இருதரப்பு உறவு மேம்படுவதற்கு உதவிகரமாக அமைந்துள்ளது,'' என்று மோதி கூறினார்.
செளதி அரேபியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
சௌதி அரேபியாவுக்கு ஆதரவாக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் பயனாக, அரசியல் ரீதியில் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ரியாத் எடுத்துள்ளது.
அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை மோதி அரசு ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்ததில் இருந்து காஷ்மீர் விவகாரத்தில் சௌதி, இந்தியாவுக்கு நேர்மறையான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. துருக்கி மற்றும் மலேசியாவை போல அல்லாமல், பிரச்சனையைத் தீவிரப்படுத்த வேண்டாம் என பாகிஸ்தானுக்கு சௌதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரியாத்துக்கு நேரில் சென்றபோதும், சௌதி - பாகிஸ்தான் இடையே காலம் காலமாக நெருக்கமான உறவுகள் உள்ள நிலையிலும், இந்த விவகாரத்தில் இந்தியாவின் பிரச்சனைகளையும் உணர்வுகளையும், தாம் புரிந்து கொண்டிருப்பதாக சௌதி தெரிவித்துள்ளது.
சௌதியின் பொருளாதார நலன்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், தங்களுக்கு பயன்தரக் கூடிய வகையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலைப்பாடு எடுக்க வேண்டிய கட்டாயம் சௌதிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியா போன்ற புதிய கூட்டாளி நாடு சௌதிக்கு தேவைப்படுகிறது. காஷ்மீர் குறித்து ஆகஸ்ட்டில் முக்கிய முடிவை அறிவித்து ஒரு வார காலத்திற்குள், நாட்டில் மிகப் பெரிய முதலீடுகளில் ஒன்றை புதுடெல்லி அறிவித்திருப்பது சாதாரண விஷயமல்ல.
சௌதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் தனது எண்ணெய் - முதல் - கெமிக்கல்ஸ் வரையிலான தொழிலில் 20 சதவீத பங்குகளை சௌதி அரேபியாவின் அரம்கோ நிறுவனத்துக்கு 75 பில்லியன் டாலர் விலைக்கு விற்க முடிவு செய்துள்ளதன் மூலம், நாட்டில் அந்நிய நேரடி முதலீடு மிக அதிகமாகச் செய்துள்ள நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
உலக அளவிலும், பிராந்திய அளவிலும் குழப்பங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியாவும், சௌதி அரேபியாவும் தங்களுடைய வெளிநாட்டுக் கொள்கை முன்னுரிமைகளை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளன.
புதுடெல்லியைப் பொருத்த வரை மத்திய கிழக்கில் சௌதி அரேபியாவும், அரேபிய வளைகுடா அரசுகளும் முக்கியமானவையாக உள்ளன. ரியாத்தை பொருத்த வரையில், 2030 லட்சியத் திட்டத்தின் அங்கமாக முக்கியமான கூட்டணி நாடுகளின் தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள விரும்பும் எட்டு முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா அமைந்துள்ளது.
எனவே இந்தியா - சௌதி இருதரப்பு பங்களிப்பில் புதிய உந்துதல் ஏற்பட்டிருப்பதில் எந்த வியப்பும் இல்லை.
(கட்டுரையாளர் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பாதுகாப்பு ஆய்வுகள் துறையில் சர்வதேச உறவுகள் குறித்த பேராசிரியராக உள்ளார்.)

No comments

Powered by Blogger.