Header Ads

Ads Bar

இலங்கை ஜனாதிபதி வேட்பாளரிடம் கேள்வி கேட்ட எம்பி கட்சியிலிருந்து நீக்கம்

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான வசந்த சேனநாயக்க
Image captionஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான வசந்த சேனநாயக்க
இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளில் கட்சியின் ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டில், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான வசந்த சேனநாயக்கவை, கட்சி உறுப்பினர் நிலையில் இருந்து நீக்கியுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வசந்த சேனநாயக்க வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்தும், அவரை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கூறியுள்ளார்.
தற்போது வெளிவிவகார ராஜாங்க அமைச்சராக வசந்த சேனநாயக்க பதவி வகிக்கின்றார்.
சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்த வசந்த சேனநாயக்க, அதில் சில கேள்விகளையும் முன்வைத்திருந்தார்.
'சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகும்போது அமைக்கப்படும் அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவாரா? ரவி கருணாநாயக்க மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை வழங்குவீர்களா? ஏப்ரல் 21ஆம் தேதியன்று நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தி அமைச்சர் ரஊப் ஹக்கீம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவர் உங்களுக்காக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றார். இதுதொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன, தொடர்ந்தும் உங்கள் அரசாங்கத்தில் அவருக்கு நீங்கள் ஆதரவு வழங்குவீர்களா?' போன்ற கேள்விகளை அந்தக் கடிதத்தில் வசந்த சேனநாயக்க கேட்டிருந்தார்.
கடிதம்
மேலும், தனது கேள்விகளுக்கு தகுந்த பதில்கள் கிடைக்கவில்லை என்றால், ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலிருந்து தான் விலகிக் கொள்ளப் போவதாகவும் அந்தக் கடிதத்தில் வசந்த சேனநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், வசந்த சேனநாயக்கவின் அந்தக் கடிதத்துக்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இதுவரை பதிலளிக்கவில்லை.
இந்த நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து வசந்த சேனநாயக்க விலக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த அரசியல் சாசன நெருக்கடியின்போது பிரதமராக பதவியேற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு வசந்த சேனநாயக்க ஆதரவு வழங்கி விட்டு, பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் திரும்பி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் பேரன்தான் வசந்த சேனநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.