Header Ads

Ads Bar

டி.என்.சேஷன்: அரசியல்வாதிகளின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவரின் வெளிவராத சுயசரிதை

டி.என்.சேஷன்
இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் ஞாயிறன்று இரவு 9.30 மணியளவில் சென்னையில் தன்னுடைய வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு வயது 86.
1955ஆம் ஆண்டு பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான டி. என். சேஷன், 1990ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி, இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். நாடு முழுவதும் பல தேர்தல் திருத்தங்களைக் கொண்டுவந்தவர் சேஷன்..
கடந்த தசாப்தத்தில் டி.என். சேஷனை விட வேறு எந்த அதிகாரியும் இவ்வளவு பெயரைப் பெற்றதில்லை. இந்திய அரசியல்வாதிகள் கடவுளுக்கும் டி.என்.சேஷனுக்கும் மட்டுமே பயப்படுவார்கள் என 90களில் வேடிக்கையாகப் பேசப்பட்டது.
சேஷனுக்கு முந்தைய தேர்தல் ஆணையர்கள் அனைவரும் அரசின் விருப்பப்படியே செயல்பட்டு வந்தனர்.
சேஷன் ஒரு நல்ல அதிகாரியாக அதிகாரத்தின் தலைமை இடத்திற்கு வந்தார்.
சேஷன் எந்த துறையில் பணிபுரிந்தாலும் அந்த துறையில் திருத்தங்கள் ஏற்பட்டது அவருடைய புகழின் மற்றுமொரு காரணம். ஆனால் 1990களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலால் சேஷன் மந்திரிகளின் பகையைச் சம்பாதித்தார்.
அவர், ”நான் காலை உணவாக அரசியல்வாதிகளை சாப்பிடுவேன்” என கூறினார். அவ்வாறு கூறியது மட்டுமில்லாமல் செய்தும் காட்டினார். இதனால் அவர் `அல்சேஷன்` என்றும் அழைக்கப்பட்டார்.

தேர்தல் திருத்தங்கள்

டி. என். சேஷன்படத்தின் காப்புரிமைK. GOVINDAN KUTTY
1992 உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலின்போது, மாவட்ட மாஜிஸ்ட்ரேட், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சுமார் 280 தேர்தல் அலுவலர்கள் அனைவரும் தேர்தல் முடியும்வரை தனக்கு கீழ் செயல்பட வேண்டும் என விளக்கினார்.
இது குறித்து ஒரு தேர்தல் நடத்தும் அதிகாரி, நாங்கள் கருணையில்லா மனிதரின் கருணையின் அடிப்படையில் இருக்கிறோம் என வேடிக்கையாகக் கூறினார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் குற்றவாளிகள் முன் ஜாமீன் எடுப்பது அல்லது போலீஸில் சரணடைவது என இரண்டு வாய்ப்புகள் அளித்தார்.
ஹிமாச்சல பிரதேசத்தில் தேர்தல் நாளன்று, பஞ்சாப் மாநிலத்தின் அமைச்சர்களின் துப்பாக்கி ஏந்திய ஆட்கள் 18 பேரை மாநிலத்தின் எல்லையைத் தாண்டாமல் தடுத்து நிறுத்தினார். உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரின் எல்லையில் நிறுத்தப்பட்ட நாகாலாந்து போலீஸார் பீகார் சட்ட மன்ற உறுப்பினர் பப்பு யாதவை எல்லையைக் கடக்க விடவில்லை.
ஹிமாச்சல பிரதேசத்தின் ஆளுநராக இருந்த குல்ஷேர் அஹமது சேஷனிடம் மாட்டிய அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவர்.
ஆளுநர் பதவியிலிருந்து கொண்டு சாத்னா தொகுதியில் தன்னுடைய மகனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார் என குல்ஷேர் அஹமது மீது குற்றஞ்சாட்டப்பட்டது. தேர்தல் ஆணையம் மூலம் சாத்னா தொகுதிக்குத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதை அறிவித்ததும், குல்ஷேர் அஹமது தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று.
இதே போல் ஆளுநர் பலிராம் பகத், ராஜஸ்தான் மாநிலத்தில் பீகார் அதிகாரி ஒருவரை காவல்துறை இயக்குனராக நியமிக்க முயற்சி செய்யும்போது சேஷன் அதைத் தடுத்து நிறுத்தினார்.
கிழக்கு உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சர் கல்பனாத் ராய் தன்னுடைய உறவினர் ஒருவருக்காகத் தேர்தல் பிரசாரம் நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்த பிறகு பிரசாரம் செய்ததால் பிடிப்பட்டார். மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அவரின் பிரசாரத்தைப் பாதியிலேயே நிறுத்தி, அவர் பிரசாரம் செய்வதை நிறுத்தவில்லையானால் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்யும் என எச்சரித்தார்.

வெளிவராத சுயசரிதை

தேர்தல் ஆணையத்தில் அவருடைய பணிக்காலம் முடிவடைந்த பிறகு மசூரியில் உள்ள லால் பகதூர் அகாடமி ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் சொற்பொழிவு நிகழ்த்த அழைத்தனர்.
அங்கே சென்று சேஷன் "உங்களை விட பான் விற்பவர் அதிகம் சம்பாதிப்பார்கள்" எனக் கூறினார். அதன்பிறகு இவ்வாறு அவரை பேச அழைக்கக்கூடாது எனத் தெளிவாக அனைவருக்கும் புரிந்தது.
டி. என். சேஷன்படத்தின் காப்புரிமைK.GOVINDAN KUTTY
சேஷன் தன்னுடைய சுயசரிதை எழுதினார் ஆனால் அதை வெளியிட அவர் தயாராக இல்லை. அவ்வாறு வெளியிட்டால் நிறையப் பேர் பாதிக்கப்படுவார்கள் என நினைத்தார். தன்னுடைய மகிழ்ச்சிக்காக மட்டுமே எழுதியதாக அவர் தெரிவித்தார்.
1995 ஐஏஎஸ் பிரிவில் இந்தியாவில் முதலிடம் பெற்றவர் சேஷன். இந்தியாவில் அனேக உயர்பதவியிலிருந்துவிட்ட சேஷன் சென்னை போக்குவரத்துத் துறையில் 2 வருடங்கள் பணியாற்றியதையே சிறந்ததாகக் கருதினார்.
சேஷன் அந்த பதவியிலிருந்தபோது 3000 பேருந்து மற்றும் 40 ஆயிரம் பணியாட்கள் அவரின் கட்டுபாட்டில் இருந்தனர். ஒரு நாள் அவரிடம் ஒரு ஓட்டுநர், "பேருந்தின் இன்ஞ்சினைப் பற்றியும், பேருந்து எப்படி ஓட்டுவது குறித்தும் உங்களுக்குத் தெரியாதென்றால் உங்களால் எப்படி ஓட்டுநரின் கஷ்டத்தைப் புரிந்துகொள்ள இயலும்?" எனக் கேள்வி எழுப்பினார்.
பேருந்து ஓட்டிய சேஷன்
இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார் சேஷன். பேருந்தை ஓட்டுவதற்கு மட்டுமல்லாமல் பணிமனையில் நீண்டநேரம் செலவிட்டார். அவர் தன்னால் இன்ஞ்சினை கழட்டி மீண்டும் மாட்டமுடியும் எனக் கூறினார். ஒரு முறை நடுரோட்டில் ஓட்டுநரை நிறுத்தி பயணிகள் நிறைந்த பேருந்தை 80 கிலோமீட்டர் வரை ஓட்டிசென்றார்.
தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டையை அவசியமாக்கியது சேஷன் ஆகும்.
இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு இது மிகவும் செலவு ஏற்படுத்தக்கூடிய ஒரு முடிவு என்று அரசியல்வாதிகள் இதை எதிர்த்தனர். வாக்காளர்கள் அடையாள அட்டை வாங்கவில்லை என்றால் 1995ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் தேர்தல் நடைபெறாது என்று கூறினார்.
பல தேர்தல்களை மக்கள் அடையாள அட்டை எடுக்கவில்லை என்பதற்காகவே தள்ளிவைத்தார்.
அவர் தேர்தலில் வேட்பாளர்களின் செலவுகளைக் குறைத்துள்ளார். ஒரு பத்திரிகையாளர், "நீங்கள் ஏன் எப்போதும் கடுமையாக நடந்து கொள்கிறீர்கள்" எனக் கேட்டபோது, "சட்டம் என்ன சொல்கிறதோ அதையே நான் செய்கிறேன். இந்த சட்டம் பிடிக்கவில்லையென்றால் சட்டத்தை மாற்றுங்கள். ஆனால் சட்டம் இருக்கும்வரை அதை நான் கடைப்பிடிப்பேன்" எனப் பதிலளித்தார்.
டி.என்.சேஷனுக்கு 1996ல் ரேமன் மெக்ஸஸ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.