தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்

தமிழ்நாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வந்த அரசு மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.
முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று பணிக்குத் திரும்புவதாகவும் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்குமென நம்புவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாநில அரசுப் பணியிலுள்ள மருத்துவர்கள் நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 25ஆம் தேதி பிற்பகலில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.
ரமா, பெருமாள் பிள்ளை, பாலாமணி, மொஹிப் அலி, சுரேஷ் ஆகிய ஐந்து மருத்துவர்கள் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஆனால், தொடக்கத்திலிருந்தே மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென அரசு கோரிவந்தது. மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்குப் பதிலாக புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தங்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களின் கூட்டமைப்பான ஃபாக்டா தெரிவித்துள்ளது.
"முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று வேலைநிறுத்தத்தை விலக்கிக்கொள்கிறோம். அரசு இனி எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்குமென எதிர்பார்க்கிறோம்" என பிபிசியிடம் கூறினார் ஃபாக்டாவின் கன்வீனரான டாக்டர் சுந்தர்ராஜன்.

மருத்துவர்களின் கோரிக்கை என்ன?
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நான்கு கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர்.
முதலாவதாக, தமிழ்நாட்டில் மருத்துவ உயர்கல்விப் படிப்புகளில் அரசுப் பணியில் உள்ளோருக்கென இடஒதுக்கீடு உண்டு. எம்.டி., எம்.எஸ். போன்ற முது நிலைப் படிப்புகளிலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளிலும் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. ஆனால், தமிழ்நாட்டில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.
இதன் காரணமாக, அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் தங்களைத் தரமுயர்த்திக் கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆகவே மீண்டும் அந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென மருத்துவர்கள் கோருகின்றனர்.
இரண்டாவதாக, இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவக் கல்லூரிகளுக்கென குறைந்தபட்சத் தேவைகளை நிர்ணயிக்கிறது. இவை பெரும்பாலும் தனியார் கல்லூரிகளில் குறைந்தபட்சத் தகுதியாகவது இருக்க வேண்டுமென்பதற்காகக் கொண்டுவரப்பட்டவை. ஆனால், இந்தக் குறைந்தபட்ச தகுதியை அடிப்படையாக வைத்து, தமிழக அரசும் பல பணியிடங்களை ரத்து செய்துவருவதாக அரசு மருத்துவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 800 பணியிடங்கள் இவ்வாறு ஒழிக்கப்பட்டதாகக் கூறும் மருத்துவர்கள், இதனால், மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டுகிறார்கள். எந்த அளவுக்கு நோயாளிகள் வருகிறார்களோ அந்த அளவுக்கு படுக்கைகளையும் மருத்துவர்களையும் அதிகரிக்க வேண்டுமென்கிறார்கள் அவர்.
மூன்றாவதாக, மருத்துவர்களின் ஊதிய விவகாரம். தற்போது அரசு மருத்துவர்கள் டைனமிக் அஸ்யூர்டு கேரியர் ப்ரொக்ரெஷன் என்ற விதியின்படி, 20 ஆண்டுகள் பணியை முடித்த பிறகுதான் நான்காம் நிலை மருத்துவ அதிகாரியாக உயர்வுபெற்று, 1.3 லட்ச ரூபாய் சம்பளத்தை எட்ட முடியும். இளநிலை, முதுநிலை, சிறப்புப் படிப்புகளை முடித்து அரசுப் பணியில் சேரவே 30 -32 வயதாகும் நிலையில், இந்த ஊதியத்தைப் பெறும்போது ஐம்பது வயதைத் தொட்டுவிடுகிறார்.
இந்த நான்காம் நிலை மருத்துவ அதிகாரியாக உயர்த்துவதை மத்திய அரசுப் பணிகளில் இருப்பதைப் போல 13 ஆண்டுகளிலேயே செய்ய வேண்டுமென இந்த மருத்துவர்கள் கோருகின்றனர்.
நான்காவதாக, பணியில் சேரும் மருத்துவர்களுக்கான நியமனம் குறித்த பிரச்சனை. அரசுப் பணியில் இருப்பதாக உறுதியளித்து முதுநிலை படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், அந்தப் படிப்பை முடித்த பிறகு சரியான பணியிடங்களில் நியமனம் செய்யாமல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக இநத் மருத்துவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதனை சரிசெய்ய வேண்டுமென அவர்கள் கோருகின்றனர்.

தமிழ்நாட்டில் பொது சுகாதார இயக்ககம், மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்ககம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த இரு பிரிவிலும் சேர்த்து சுமார் 11 ஆயிரம் மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். மருத்துவக் கல்வித் துறையில் (டிஎம்இ) சுமார் 7000 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் 18 ஆயிரம் மருத்துவர்கள் அரசுப் பணியில் உள்ளனர்.
2009-ம் ஆண்டில் தமிழக அரசு, மாநில அரசு மருத்துவர்களின் பதவி உயர்வு, ஊதியம் தொடர்பாக 354/2009 என்ற எண் கொண்ட விரிவான அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதில் மருத்துவர்களுக்கான பதவி உயர்வு, பணி நியமனம், ஊதியம், தானாக முன்வந்து பதவி விலகுவதற்கான வழிமுறைகள் ஆகியவை விரிவாக வகுக்கப்பட்டன.
இதில் ஊதியம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், அவ்வாறு ஏதும் நடக்காத நிலையில், 2017ஆம் ஆண்டில் அரசு மருத்துவர்கள் இதனை அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்றனர்.
இதற்குப் பிறகு, 2018ல் இது தொடர்பாக 6,000 மருத்துவர்கள் பங்கேற்ற பேரணி ஒன்றும் நடத்தப்பட்டது. இதற்குப் பிறகு, மூன்று இயக்குனர்களைக் கொண்ட கமிட்டி ஒன்று நியமனம் செய்யப்பட்டது. இந்தக் கமிட்டி, மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்று பரிந்துரை அளித்தது.
இதற்குப் பிறகு 2018 டிசம்பரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மருத்துவர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டுமென நீதிமன்றம் கூறியது.
ஏதும் நடக்காத நிலையில், ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேச்சு வார்த்தை நடத்திய மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆறு வார அவகாசம் அளிக்கும்படி கேட்டார்.
அந்த அவகாசம் அக்டோபர் 9ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், 25ஆம் தேதியன்று காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை மருத்துவர்கள் துவங்கியுள்ளனர். போராட்டம் துவங்கிய தினத்தன்று மாநில சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் போராடும் மருத்துவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் எவ்வித வாக்குறுதியும் கொடுக்கப்படாத நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட மறுத்தவர்கள் முடிவுசெய்தனர்.
Post a Comment