Header Ads

Ads Bar

குடியுரிமை திருத்தச் சட்டம்: 'மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா' - டெல்லி காவல்துறை கூறுவதென்ன?


Citizenship Amendment Billபடத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES VIA GETTY IMAGES
Image captionஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறை ஞாயிறன்று நுழைந்தபின் அப்பகுதியே போர்க்களம் போல மாறியது.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்துவரும் சூழலில், டெல்லியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை காவல்துறை மறுக்கிறது.
தாங்கள் துப்பாக்கியால் சுடப்பட்டதாக குறைந்தது மூன்று பேர் கூறியுள்ளனர். கண்ணீர் புகைக்குண்டு உருளைகளின் உடைந்த துண்டுகளால் அவர்கள் காயமடைந்ததாக காவல்துறை கூறுகிறது.
தான் சுடப்பட்டதாகக் கருதும் நபர் ஒருவரின் மருத்துவ அறிக்கையை பிபிசி பார்த்தது. அவரது தொடைப் பகுதியில் இருந்து 'வெளியில் இருந்து உடலுக்குள் சென்ற பொருள்' ஒன்றை மருத்துவர்கள் அகற்றியதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியான கொடுமைகளுக்கு உள்ளான இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்தச் சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது.

ஜாமியா போராட்டம்படத்தின் காப்புரிமைSAMIRATMAJ MISHRA / BBC

எனினும், இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள சுமார் 20 கோடி இஸ்லாமியர்களுக்கு பாரபட்சம் காட்டும் வகையில் இந்த சட்டத் திருத்தம் உள்ளது என்றும், 'இந்து தேசியவாத' கொள்கைகளை அமலாக்கும் முயற்சிகளின் ஓர் அங்கம் என்றும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அண்டை நாடுகளில் இருந்து குடியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எல்லையோர மாநிலங்களில் உள்ளவர்கள் கருதுகின்றனர்.

டெல்லியில் நடந்தது என்ன?

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் ஞாயிறன்று நடத்திய போராட்டத்தில் மூவர் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானதாக செய்திகள் வெளியானது.
இருவர் துப்பாக்கி குண்டுகளால் உண்டான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதை காவல்துறை மறுக்கிறது.
துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறும் மூன்றாவது நபர் மாணவர் அல்ல; அவர் போராட்டம் நடந்த பகுதி வழியாக சென்றவர். இவரது உடலில் இருந்துதான் ஒரு பொருள் எடுக்கப்பட்டதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. அது துப்பாக்கி குண்டுதானா என்று தெரிவிக்கப்படவில்லை.

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம்படத்தின் காப்புரிமைANI

கைத்துப்பாக்கியை வைத்து காவலர்கள் தம்மை நோக்கி சுட்டதைத் தாம் பார்த்ததாக அவர் கூறுகிறார். ஆனால், வாகனங்கள் பலவும் தீ வைக்கப்பட்ட இந்த போராட்டத்தின்போது தாங்கள் ரப்பர் புல்லட்டுகளைக்கூடப் பயன்படுத்தவில்லை என்று டெல்லி காவல்துறை கூறுகிறது.
ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தர் 200 பேர் காயமடைந்துள்ளதாக கூறுகிறார். மாணவர்கள் 39 பேரும், காவலர்கள் 30 பேரும் காயமடைந்துள்ளதாக காவல் துறை கூறுகிறது. ஒரு காவலர் மோசமாக காயமடைந்துள்ளார் என்கிறது காவல் துறை.

இந்தியா முழுவதும் போராட்டங்கள்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் கடந்த வியாழன்று தொடங்கிய போராட்டங்களில் இதுவரை குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி மட்டுமல்லாது இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Citizenship Amendment Billபடத்தின் காப்புரிமைAFP

லக்னோவில் நடந்த போராட்டத்தில் மாணவர்கள் காவல்துறையினர் மீதும், காவல்துறையினர் பதிலடியாக மாணவர்கள் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்துவதும் காணொளி மூலம் வெளியாகியுள்ளது.
காவல் அதிகாரிகளால் தடிகளைக் கொண்டு மாணவர்கள் தாக்கப்படுவதும் காணொளியில் தெரிகிறது.
இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பேனர்ஜி நடத்திய பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கெடுத்தனர்.

இந்திய அரசு என்ன சொல்கிறது?

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையுடன் இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது, இந்தியாவின் பல நூற்றாண்டுக் கலாசாரமான அனைவரையும் ஏற்றுக்கொள்ளுதல், நல்லிணக்கம், சக உயிர்களிடம் அன்பு செலுத்துதல் ஆகியவற்றை வெளிக்காட்டும் வகையில் இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
"எந்த மதத்தைச் சேர்ந்த இந்தியக் குடிமகனும் இந்த சட்டத் திருத்தத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், "பாசிஸ்ட்டுகளால் வெளியிடப்படும் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் ஆயுதம்" என்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி இந்தச் சட்டத் திருத்தத்தை விமர்சித்துள்ளார்.

போராட்டக்காரர்களின் பார்வை என்ன?
போலீசார் தாக்குதலில் இருந்து மாணவரைக் காக்கும் மாணவிகள்

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் ஓர் ஆண் மாணவரை, பெண்கள் குழு ஒன்று காவல் துறையின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் காணொளி ஒன்று பரவி வருகிறது.
அந்த மாணவிகளில் ஒருவரான லதீடா பர்சானா "இந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று அனைவருக்கும் தெரியும்," என்கிறார்.
"இது எங்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிரானது. வெளியே வந்து அனைவரும் இந்த சட்டத்துக்கு எதிராகப் போராட வேண்டும்," என்கிறார் இந்த 22 வயதாகும் மாணவி. 


No comments

Powered by Blogger.